அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை செவிச் சவ்வை உருவாக்கியுள்ளார்கள்!

காதுகளின் உட்புறத்தில் ஏற்படும் நாள்பட்ட தொற்றுக்களால் கடும் வலியும், காது கேட்கும் திறன் இழப்பும் ஏற்படலாம். இந்த தொற்றுக்களை நீக்கி காதை சரி செய்ய, நோயாளிகள் பல முறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்கிறது. இந்த அவஸ்தைகளை போக்க, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘கிளியர் ட்ரம்’ என்ற செயற்கை செவிச் சவ்வை உருவாக்கியிருக்கின்றனர்.

8 ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பின், பட்டு இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள கிளியர் ட்ரம், கண்ணாடிக் காகிதம் போலத் தோற்றமளிக்கிறது. இதைப் பொருத்தியதும், நோயாளிக்கு முன் போல தெளிவாக ஒலிகளைக் கேட்கும் திறன் கிடைக்கிறது. இதனால் தான், இதற்கு கிளியர் ட்ரம் என, ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

கிளியர் ட்ரம்மை, நுட்பமான அறுவைச் சிகிச்சை மூலம் நோயாளியின் காதில் பொருத்திய சில நாட்களிலேயே, காதிலுள்ள இயற்கையான செவிப்பறை சவ்வுகள் அதைப் பற்றிக்கொண்டு வளர ஆரம்பித்துவிடும். இதனால், சிகிச்சை முடிந்தும், பல முறை மருத்துவரை பார்க்க வரவேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர், இதை உருவாக்கிய பெர்த் மற்றும் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.