காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பட்டிமன்றமாக மாறிவிட்டது!

காணாமல் ஆக்கப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஐயப்படுவதும், இது விடயத்தில் இவரது விரல் தமக்குப் பின்னால் வந்த ஜனாதிபதி மகிந்தவை நோக்கி நீளுவதும் சாதாரணமான ஒரு செய்தியாகப் பார்க்க முடியாதது.

காணாமற் போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நூறு நாட்களைத் தாண்டிவிட்டது. இதனை ஒரு விளையாட்டாக அரசாங்கம் கருதி வருகின்றதென்றால், அவர்கள் மொழியில் ஒரு ஷசெஞ்சரி போடப்பட்டுவிட்டது எனலாம்.

நூறாவது நாள் போராட்டத்தையொட்டி ஏ-9 பிரதான வீதியை மறித்த மக்கள் அன்றைய நாளை குத்துப் போராட்டமாக நடத்தியதாக யாழ்ப்பாணத் தினசரி ஒன்று முதற்பக்கத்தில் கொட்டை எழுத்தில் செய்தியை வெளியிட்டுள்ளது.

உறவுகளைத் தேடும் மக்கள் ஒரு போராட்டத்தை நூறு நாட்கள் தொடர்ந்து நடத்துவதென்பது சாதாரண விடயமல்ல. ஆத்மசக்தி திரிகரண சுத்தியாக இங்கு அமைய வேண்டியது அவசியம்.

ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்க தரப்பு எவ்வாறு பார்க்கிறது என்பதும், இதனை எவ்வாறு அணுகுகிறது என்பதும் உற்றுக் கவனிக்கப்பட வேண்டியது.

கடந்த மூன்று வாரங்களுக்குள் இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துகளையும் அதன் மீதான பார்வைகளையும் நோக்குவது இன்றைய தேவையாக உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக விசேட குழுவொன்று நியமிக்கப்படுமென்றும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு புதிய குழு செயற்படுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் 21ம் திகதி அறிவித்தார்.

முன்னைய ஆணைக்குழுவென்று இவர் குறிப்பிடுவது மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பரணகம குழுவேயாகும். மூன்று வருடங்களாக இழுபட்ட இந்தக் குழுவின் அறிக்கைக்கு என்னாச்சு என்பது தெரியாத நிலையில், அதன் அறிக்கையையும் கவனத்தில் எடுத்து புதிய விசேட குழு செயற்படுமென கூறியிருப்பது வேடிக்கையானது.

திருமலையிலுள்ள சம்பூரில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அருகில் வைத்துக் கொண்டே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார். ஆனால் சம்பந்தன் செவி வழியாக இதனை உள்வாங்கினாரா அல்லது, ஒரு காதால் வாங்கி மறுகாதால் வெளியேற்றினாரா என்பது எவருக்கும் தெரியாது.

அதே நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் ஜனாதிபதியின் கூற்றுத் தொடர்பாக எதுவும் தெரிவிக்காது அதீத மௌனம் காத்ததே இந்த சந்தேகத்துக்குக் காரணம். சம்பூர் கூட்டத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மற்றொரு கருத்தை ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.

காணாமற் போனோர் இருக்கும் இடங்களை எமக்குக் கூறினால் அந்த இடங்களில் தேடுதலை நடத்துவோம்” என்பதுதான் ஜனாதிபதி தெரிவித்த கருத்து. அவர்கள் இருக்கும் இடம் தெரிந்திருந்தால் அவர்களின் உறவுகள் அந்த இடத்தில் சென்று போராட்டம் நடத்துவார்களே தவிர, வன்னியில் அல்ல என்பது இந்த ஜனாதிபதிக்குப் புரியாதிருப்பது விந்தையானது.

மக்களின் நியாயமான கோரிக்கையை தட்டிக் கழிப்பதற்கான ஒரு யுக்தியே ஜனாதிபதியின் இந்தக் கருத்து.  சில நாட்களுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட 227 பேரின் விபரங்கள் தொடர்பாக இரண்டு விண்ணப்பங்களை போராட்ட உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

தகவல் அறியும் புதிய சட்டத்தின் 31(1) இன் பிரிவுக்கமைய இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதற்கு ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் கடந்த மாதம் 25ம் திகதி ஒரு பதில் அனுப்பியிருந்தார்.  “குறித்த விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களைப் பெற முடியாததால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன” என்பது இந்தப் பதில்.

முப்படையினரையும் காவற்துறையினரையும் சேர்த்து மூன்று இலட்சம் வரையானவர்களை ஷநாட்டைக் காப்பாற்ற| வைத்திருக்கும் நல்லாட்சி அரசாங்கத்தினால், அதே படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கிறது என்பதை எவ்வாறு நம்பலாம்?

இதன் அடுத்த செயற்பாடாக மற்றொரு வைபவத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி பின்வருமாறு குறிப்பிட்டார் “காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தை உருவாக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியமென தெரிவிக்கப்பட்டதால், அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளேன்” என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சட்ட வரைபு 2016 ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜே.வி.பி. முன்வைத்த திருத்தங்களை உள்ளடக்கி திருத்தச் சட்டம் அமைச்சரவையால் ஏற்கப்பட்டு வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுவிட்டது,

இதற்கான அலுவலகத்தைத் திறப்பதற்கு இத்தனை இழுபறி என்றால், இந்த அலுவலகத்தினால் அதனை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேறும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இப்படியாக இந்த விவகாரம் இழுபறியில் ஆடிக்கொண்டிருக்கையில் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே புதிய குண்டொன்றை வீசியுள்ளார்.

காணாமல் போனவர்களை அரசிடம் மட்டும் கேட்பதில் நியாயம் இல்லை என்கிறார் இவர். “இந்திய அமைதிப்படையென்னும் அந்நாட்டு இராணுவத்தாலும் விடுதலைப் புலிகளாலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். எனவே அரசிடம் மட்டும் இதனை கேட்கக்கூடாது” ன்பது இவரது வியாக்கியானம்.

இது போதாதென்று, காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதனூடாக சகல பிரச்சனைகளும் தீர்க்கப்படுமென்றும் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளார்.

“இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டோரை அரசாங்கத்திடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது” என்று பதிற் கேள்வி எழுப்பியுள்ளார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.

மறுபுறத்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்தை கொழும்பு ஊடகமொன்று மறுபிரசுரம் செய்துள்ளது.
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும்.

எனக்குத் தெரிந்தவகையில் அப்படி யாரையும் முகாம்களில் மறைத்து வைக்கவில்லை. அப்போது ராஜபக்ச ஆட்சியில் இருந்த இராணுவத்தினர் தமது வழமையான பழக்கத்துக்கு ஏற்ப அவர்களை அழைத்துச் சென்று கொலை செய்திருக்கலாம். அப்போது அவர்களை பொறுப்பேற்றிருந்தால் அவர்களைக் கொலை செய்வார்களேயன்றி இவ்வளவு வருடங்களாக தடுத்து வைத்திருக்க மாட்டார்கள்” என்று சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ள கருத்து அரசாங்க தரப்பால் மிகவும் பாரதூரமான ஒன்றாகப் பார்க்கப்பட்டு பூரணமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்கள் கொல்லப்பட்டு விட்டார்களென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஐயப்படுவதும், இது விடயத்தில் இவரது விரல் தமக்கு பின்னால் வந்த ஜனாதிபதி மகிந்தவை நோக்கி நீளுவதும் சாதாரணமான ஒரு செய்தியாகப் பார்க்க முடியாதது.

செம்மணியில் தமது ஆட்சியில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து வைத்தருக்கும் அம்மணி, குரக்கன் சால்வைக்காரரின் ஆட்சியில் என்னென்ன நடைபெற்றிருக்கும் என்று கூறுவது பாம்பின் காலைப் பாம்புதான் அறியும்.

எட்டாண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி நடைபெறும் போராட்டம் நூறு நாட்களைக் கடந்துவிட்ட நிலையிலும் இதனை உணர்வுபூர்வமாகப் பார்க்காத சில அரசியல்வாதிகள் பட்டிமன்றமாக மாற்றிக்கொண்டிருப்பது வேதனை கலந்த ஆத்திரத்தைத் தருகிறது.

இவைகளுக்கு முன்னின்று குரல் எழுப்ப வேண்டிய தமிழர் தலைமை, வெறும் கடமைக்காக அவ்வப்போது வாய் திறந்தவாறு அடுத்து தேர்தலை நோக்கிக் காலத்தை கடத்துவதை என்னென்று சொல்வது? யாரிடம் முறையிடுவது?

 -பனங்காட்டான்