300 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய இலங்கையர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த இலங்கையர் விமானத்தில் ஏறுவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர் சிகார் மற்றும் கெங்ஸ்டர் ரெப் இசையை ரசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு 11.11 மணியளவில் MH128 என்ற விமானம் விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சற்று நேரத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் விமானத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
25 வயதான அவர் அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் சமையல் நிபுணர் கற்கை நெறிகளை மேற்கொண்டு வருகின்றார்.
எனினும் விமானத்தை தகர்ப்பதாக அச்சுறுத்துவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர் மெல்போர்னில் உள்ள Tullamarine விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் புகைபிடிப்பதும், ரெப் இசை கேட்கும் வகையிலான வீடியோ ஒன்றை தனது Instagram கணக்கில் பதிவிட்டுள்ளார்.
Tullamarine விமான நிலையத்திற்கு காரில் பயணிக்கும் போது எடுக்கப்பட்ட ஓய்வெடுக்கும் வகையிலான வீடியோ ஒன்றையே அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் புதன்கிழமை இரவு 8 மணியளவில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மூன்று வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இந்த அச்சறுத்தல் தொடர்பில் எந்தவொரு தகவலும் அவர் வெளியிட்டிருக்கவில்லை.
அவரது பேஸ்புக் பக்கத்தில் கொழும்பில் தான் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், மேலாடையற்ற நிலையில் பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், மேலும் இராணுவ ஆடைகளுடனான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.