மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம், குண்டு இருப்பதாக கூறி, விமானியின் அறைக்குள் நுழைய முயன்றார்.
இதனால், விமானி மெல்பேர்ன் விமான நிலையத்துக்கே திருப்பினார். நேற்றிரவு 11.40 மணியளவில் இந்த விமானம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மெல்பேர்ன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து. குண்டுப் புரளியைக் கிளப்பிய இலங்கையர் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மின்கலப் பொதி ஒன்றையே அவர் குண்டு என்று கூறி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளார்.
இது விமானக் கடத்தல் அல்ல என்றும் பயணி ஒருவர் விமானியின் அறைக்குள் நுழைந்து தொந்தரவு செய்ய முயன்றதால் தான் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், மலேசிய போக்குவரத்து அமைச்சர் அப்துல் அசீஸ் பின் கப்ராவி தெரிவித்தார்.
ஆயுதங்களுடன் விமானத்துக்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள், இலங்கையரை கைவிலங்கிட்டு பிடித்துச் சென்றனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர், தன்னிடம் குண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கவைக்கப் பேகாவதாகவும் உரத்த குரலில கத்தியதாக குறிப்பிட்டார்.
“அவர் மனநிலை பாதித்தவர் போல நடந்து கொண்டார். திடீரென உணர்ச்சிவசப்பட்டார். ஓடினார். விமானத்தின் பின்பக்கத்துக்கு ஓடினார். அவரை எதிர்கொள்வதை விட வேறெதையும் செய்ய முடியவில்லை.” என்று அந்தப் பயணி கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தினால் மெல்பேர்ன் விமான நிலையத்தில் 15 நிமிடங்கள் வரை விமானங்கள் தரையிறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்ரேலிய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal


