ரமேஷ் செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சுவாதி கொலை வழக்கு’ படத்துக்கு சுவாதியின் தந்தை தடை கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் ‘எனது மகள் கொலை தொடர்பான கதையை திரையிட அனுமதிக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தை ‘உளவுத்துறை’ என்ற படத்தை இயக்கிய ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா இப்படத்தை தயாரித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal