அவுஸ்ரேலிய அகதிகள் தடுப்பு முகாமில் ஒன்றான நவுருத்தீவு முகாமிலிருந்த சிரிய அகதி ஒருவர் கம்போடியாவில் குடியமர சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், அவர் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் குறித்த மேலதிக தகவல்கள் எதையும் அவுஸ்ரேலிய குடிவரவு அதிகாரிகள் வெளியிடவில்லை.
முன்னதாக,2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-கம்போடியா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி நவுரு தடுப்பு முகாமில்(Nauru Detention Centre-Australia) உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கம்போடியாவுக்கு ஆஸ்திரேலிய அரசு சுமார் 50 மில்லியன் டாலர்களை கொடுத்தது.
இந்த ஒப்பந்தத்தின் படி கம்போடியாவில் குடியமர்த்தப்படும் ஏழாவது அகதி இவராவார்.
அதே சமயம் அகதிகளை கம்போடியாவில் அகதிகளை குடியமர்த்துவதற்கு அந்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் இருந்து வருகின்றன . கம்போடியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் வறுமை நிலையில் இருக்கும் பொழுது இங்கு அகதிகள் குடியமர்த்தப்படுவதை ஏற்க முடியாது என்ற கருத்துகளும் இருந்து வருகின்றன. முன்னர் குடியமர சம்மதம் தெரிவித்து ஆறு அகதிகள் கம்போடியாவிற்கு சென்ற பின்னர், மூவர் சொந்த நாட்டிற்கே திரும்புவதாக சொல்லியுள்ளனர்.
இந்த நிலையின் படி பார்த்தால் கம்போடியாவின் பொருளாதார நிலையும் சமூக நிலையும் ஒப்பந்தத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 1970 காலக்கட்டங்களில் அந்நாட்டில் உள்ள மக்கள் பெரும் இனப்படுகொலைக்கு முகம் கொடுக்கும் சூழல் ஏற்பட்டது.
வன்முறையில் இருந்து மீண்டிருந்தாலும் அந்நாட்டின் சமூக நிலையிலோ பொருளாதார நிலையிலோ பெரியதொரு மாற்றம் இதுவரை ஏற்படவில்லை. அவுஸ்ரேலியாவின் பொருளாதார நிலையோடு ஒப்பிட்டால் கம்போடியாவின் நிலை ஒரு சதவீதம் என்று குறிப்பிடும் அளவில் கூட இல்லை. கம்போடியாவில் அகதிகள் குடியமர்த்தலுக்கு எழும் எதிர்ப்பிற்கு இவையெல்லாம் காரணமாக சொல்லப்படுகின்றது.