ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் மகாவிஷ்ணு (சமுத்திரக்கனி) வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரைத் தன் வாகனத்தில் எற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரை கிறார். வெட்டுப்பட்ட நபரின் உயிர் போக வில்லை என்று தெரிந்ததும் அவரை அந்த ஆம்புலன்ஸிலேயே தீர்த்துக் கட்ட எதிராளி நாராயணன் (நமோ நாரா யணன்) தன் ஆட்களுக்குக் கட்டளை யிடுகிறார். அந்தக் கொலைக் கும்பலிடம் இருந்து பாதுகாப்பாக அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைக்கிறார் சமுத்திரக் கனி. இதனால் சமுத்திரக்கனிக்கும், நமோ நாராயணனுக்கும் பகை மூள்கிறது.
நாராயணனின் தம்பி சவுந்தர ராஜா ஒரு பிரச்சினையில் சிக்கி உயிருக்குப் போராடும்போது சமுத்திரக் கனியின் ஆம்புலன்ஸில் ஏற்றப் பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். அவர் இறந்துவிட்ட தாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். தன்னைப் பழிவாங்குவதற்காக சமுத் திரக்கனி தன் தம்பியைக் கொன்று விட்டதாக நினைக்கும் நாராயணனின் கோபம் வலுக்கிறது. நாராயணனால் சமுத்திரக்கனி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? அதை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
சாதி அரசியல் தொடங்கி மாணவி கள், பெண்களுக்கு எதிரான கொடுமை, பணப் பதுக்கல், சமீபத்தில் வெடித்த ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல், விவசாயிகள் பிரச்சினை என்று காட்சிக்குக் காட்சி சமூகத்தின் நடப்புப் போக்குகளை அலசுகிறது படம். வசனங்கள் பல இடங்களில் வலுவாகவே இருக்கின்றன. இந்தக் கருத்துகள் முழுக்க பிரச்சாரமாக ஆகிவிடக் கூடாது என்று நகைச்சுவை, காதல், நட்பு ஆகிய விஷயங்களைத் திரைக்கதைக்குள் நுழைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் இத்தனையையும் மீறிப் பிரச்சாரம் தூக்கலாகவே இருக்கிறது.
பிரச்சார பாணியில் கருத்துகளை முன் வைக்கும்போது பெரும்பாலும் நாயகனையும், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் மட்டுமே படத்தில் பிரதிபலிக்கும் சூழல் நிலவிவிடும். ஆனால், இப்படத்தில் தன்னைச் சுற்றியுள்ள பல கதாபாத்திரங்களுக்கும் வேலை கொடுத்திருக்கிறார் சமுத்திரக் கனி. என்றாலும் அது முழுமையாகத் திருப்தி அளிக்கவில்லை.
விக்ராந்த் மனம் மாறும் இடம், கல்லூரி மாணவிகளின் குமுறல், தன் குருநாதர் கூற்றுப்படி சமுத்திரக்கனி எதிரியை நேரடியாகப் பழி வாங்காமல் திசை மாற்றிவிடுவது உள்ளிட்ட பல காட்சிகள் கைதட்டலைப் பெறு கின்றன. காவல்துறை அதிகாரி களில் நல்லவர்களையும், கெட்டவர் களையும் பிரித்து காட்டியுள்ள இடமும் சிறப்பு.
சுனைனா, சமுத்திரக்கனி காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை. வீட்டைச் சுற்றிச் சின்னச் சின்னப் பொருட்கள் திருடுபோவது சுவாரஸ்யமாக இருந் தாலும் அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. அதற்காக ஒரு சங்கம் அமைத்துத் தேடும் இடமும் அவ்வளவு ரசிக்கும்படி இல்லை. நமோ நாராயணனிடம் பணம் வாங்கிக்கொண்டு எல்லா விதமான குற்றங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் தாசில்தார், விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் நல்லவர்களாக மாறும் இடம் செயற்கையாக இருக்கிறது.
அரசியல்வாதியை நாயகன் எதிர்கொள்ளும் விதம் வலுவாக உருப்பெறவில்லை. ஆனால், சமூக மாற்றம், தார்மீகப் போராட்டம் ஆகிய வற்றை முன்னெடுக்க வன்முறையை நாட வேண்டியதில்லை என்பதை அழுத்தமாகச் சொன்னதற்காக இயக்கு நர் சமுத்திரக்கனிக்குப் பாராட்டுகள்.
தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கொதிப்போடு உருகும் பக்குவமான நடிப்பு சமுத்திரக் கனிக்கு. ‘இதுவரை தன் ஆம்புலன் ஸில் ஏற்றிய ஒரு உயிர்க்கூட இறந்ததில்லை. இதுதான் என் தாய்!’ என்று உருகும் இடங்களில் மனதைக் கவர்கிறார் கனி.
சுனைனா, வேல.ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா, சூரி ஆகியோர்களது பங்களிப்புகள் படத்தின் சுவையைக் கூட்டுகின்றன. விக்ராந்த் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
ஏகாம்பரம், ரிச்சர்ட் எம்.நாதன் ஆகியோரின் ஒளிப்பதிவு நன்று. பின்னணி இசையில் அசத்தியுள்ள ஜஸ்டின் பிரபாகர் பாடல் இசையில் சுமார்தான்.
சாமானியர்கள் எப்போதும் பணத் திமிர் பிடித்த அரசியல் சக்தியால்தான் அடக்கப்படுகிறார்கள் என்பதைப் பிரதிபலிக்க முயற்சித்த இந்தப் படம், கருத்துப் பிரச்சாரத்தின் மூலமாகவே அதிகம் தொண்டாற்றியுள்ளது.