அவுஸ்ரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் 1600 ற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒரே முறை அகதிகளை குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலியாவின் மனுஸ் மற்றும் நவுரு தடுப்பு முகாம்களிலிருந்து 1,250 அகதிகள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வரும் நிலையில், இதற்கு 1600 ற்கும் மேற்பட்ட அகதிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மனுஸ் மற்றும் நவுரு தீவில் உள்ள தடுப்பு முகாம்களில், அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் இதற்கான பணிகளை அகதிகளிடையே மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 900 அகதிகளிடையே இதற்கான முதற்கட்ட நேர்காணல்கள் முடிந்துள்ளன. அதில் 800க்கும் மேற்பட்டோரிடம் கைரேகை பதிவுகளும், 250 பேரிடம் பாதுகாப்பிற்கான நேர்காணல்களும் நிறைவடைந்துள்ளதாகவும் மருத்துவ பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.