அவுஸ்ரேலியாவில், ஆஸ்துமா நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஈழத்தவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அருள்செல்வம் வேல்முருகு என்ற 35 வயதுடைய ஈழ புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த புகலிடக் கோரிக்கையாளருக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளே மரணத்திற்கு காரணம் என மேற்கு அவுஸ்திரேலிய மரண விசாரணை அதிகாரி பெரி கிங் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தீவு குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு சிகிச்சைகளுக்காக வருகை தந்த சில மணித்தியாலங்களுக்குள்ளேயே ஈழ புகலிடக் கோரிக்யைாளர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சட்டவிரோத படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட அருள்செல்வம், சுமாத்திரா அகதி முகாமில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்ரேலியாவை சென்றடைந்தார் என அவுஸ்ரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த ஈழத்தில் உள்ள மருத்துவமனையில் தனது ஆஸ்துமா நோய்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தீவில் இருந்த மருத்துவ பாதுகாப்பை விட அங்கு பாதுகாப்பு சிறப்பாக இருந்துள்ளது என்றும் மேற்கு அவுஸ்ரேலிய மரண விசாரணை அதிகாரி பெரி கிங் இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தவரின் மரணத்திற்கான காரணம், போதுமான சிகிச்சைகள் மற்றும் கவனிப்பு வழங்குவதில் ஏற்பட்ட தோல்வியா? என்பது தொடர்பில் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் மேற்கு அவுஸ்ரேலிய மரண விசாரணை அதிகாரி பெரி கிங் குறிப்பிட்டுள்ளார்.