மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் ப்ரோ லேப்டாப் வெளியிடப்பட்டது. ஷாங்காய் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சர்பேஸ் ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இவற்றின் முன்பதிவு துவங்கவுள்ள நிலையில், விலை 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,000 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை சர்பேஸ் ப்ரோ லேப்டாப்பில் 12.3 இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி, மைக்ரோ சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும் எல்டிஇ மாடல்களின் விலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை வெளியிடப்படவில்லை.
புதிய சர்பேஸ் ப்ரோவுடன் அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சர்பேஸ் பென் சாதனமும் வெளியிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டுள்ள சர்பேஸ் பென் முந்தைய மாடலை விட துல்லியமாக இருக்கும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இத்துடன் 8 எம்பி பிரைமரி ஆட்டோஃபோகஸ் கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சர்பேஸ் ப்ரோ இன்டெல் நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை கேபி லேக் பிராசஸர், சர்பேஸ் டயல் உள்ளிட்ட அம்சங்களுடன் 13.5 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ விலையை பொருத்த 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,000 முதல் துவங்குகிறது, அனைத்து அக்சசிரீகளையும் கொண்டுள்ள மாடல் 2500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,63,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சர்பேஸ் ப்ரோ லேப்டாப் மாடல்களின் விற்பனை ஜூன் 15-ந்தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 27 நாடுகளில் விற்பனை துவங்க உள்ள நிலையில், புதிய சர்பேஸ் ப்ரோ லேப்டாப்பின் இந்திய விற்பனை குறித்து மைக்ரோசாப்ட் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.