அவுஸ்ரேலியாவின் தீவுப்பகுதியான டாஸ்மானியா நகரில் இந்தியாவை சேர்ந்த டாக்சி சாரதி பெண் உள்பட இரு பயணிகள் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த பிரதிப் சிங்(25) என்பவர் அவுஸ்ரேலியா நாட்டில் விருந்தோம்பல் தொடர்பான பட்டப்படிப்பு படித்து வருகிறார். படிப்பு நேரம் போக ஓய்வாக இருக்கும் வேளைகளில் தற்காலிகமாக வாடகை கார்களை ஓட்டி கைச்செலவுக்கு பணம் சம்பாதிப்பது வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இவரது காரில் ஒரு பெண்ணுடன் ஒருவர் சவாரி சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவின் தீவுப்பகுதியான டாஸ்மானியா அருகேயுள்ள சாண்டி பே மெக்டொனால்ட் டிரைவ்-த்ரூ பகுதி வழியாக கார் சென்றபோது அதில் அமர்ந்திருந்த பெண் திடீரென்று வாந்தி எடுக்க முயன்றார். இதை கவனித்துவிட்ட பிரதிப் சிங் உடனடியாக காரை நிறுத்தினார்.
காரை விட்டு கீழே இறங்கி வாந்தி எடுங்கள் என்று அவர்களிடம் கூறினார். இதனால் பயணிகளுக்கும் அவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. காருக்குள் வாந்தி எடுத்து அசுத்தப்படுத்தினால் வாடகை கட்டணம்போக காரை கழுவி தூய்மைப்படுத்தவும் தனியாக பணம் தர வேண்டியிருக்கும் என்று பிரதிப் சிங் தெரிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் டாக்சி டிரைவர் பிரதிப் சிங்கை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். இச்சம்பவம் தொடர்பாக அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்துவந்த காவல் துறை அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராயல் ஹோபார்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் வந்த அந்தப் பெண்ணும் அவருடன் வந்த நபரும் இந்தியகளே உங்களுக்கு இதுதான் தகுந்தப் பாடம் என்றும் தரக்குறைவாக திட்டியதாகவும் காவல் துறை அளித்த வாக்குமூலத்தின்போது பிரதிப் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஹோபார்ட் நகர காவல் துறை, இனவெறியுடன் வெளிநாட்டு நபரை தாக்கியது, காரையும் தாக்கி சேதப்படுத்தியது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் அவர்கள் இருவர் மீதும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு வரும் ஜூன் மாதம் 26-ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.
அவுஸ்ரேலியா நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவை சேர்ந்த மூன்று டாக்சி சாரதிகள் இதுபோன்ற இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal