தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் மோகன்லாலின் ‘புலிமுருகன்’

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் தற்போது தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் வசூலிலும் மலையாளத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை படைத்தது. ரூ.150 கோடி வரை இப்படம் மலையாளத்தில் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தை அதே பெயரில் தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வெளியிடவுள்ளனர். மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை தயாரித்த முலக்குபாடம் பிலிம்ஸ் நிறுவனமே தமிழிலும் இப்படத்தை உருவாக்குகிறது.

இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தை வைஷாக் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்திற்கு ஆர்.பி.பாலா என்பவர் தமிழில் வசனம் எழுதி தமிழாக்கம் செய்துள்ளார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புலிமுருகன் படம் தற்போது தமிழ் ரசிகர்களுக்காகவே 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வெளியாகவுள்ளது. விரைவில் மலையாளத்திலும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை 3டி தொழில்நுட்பத்தில் சிறப்பு காட்சியாக திரையிட்டனர். ஒரே காட்சியில் 25,000 பேர் பார்த்து அது ‘கின்னஸ்’ சாதனையாக பதிவிடப்பட்டது. இப்படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் என்ற நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் தமிழ் டிரைலர் மற்றும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.