முகநூல் செயலியை கொண்டு உணவு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட உணவகங்களின் இணையத்தளம் அல்லது பிரத்தியேக செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
முகநூல் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும். இதனால் குறிப்பிட்ட உணவகங்களின் செயலி அல்லது இணையபக்கத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை இயக்க பேஸ்புக் வாசிகள், செயலியில் வழங்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.
கடந்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் நிறுவனம் டெலிவரி.காம் மற்றும் ஸ்லைஸ் நிறுவனங்களுடன் இணைவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், புதிய சேவை வழங்கப்பட்டுள்ளதும் இதன் தொடர்ச்சியான நடவடிக்கை தான் என பேஸ்புக் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக், இந்த ஆண்டின் இறுதிக்குள் 200 கோடி மாதாந்திர பயனர்களை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்துடன் உலகின் பிரபல செயலிகளான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசன்ஜர் உள்ளிட்ட செயலிகளை பேஸ்புக் வைத்துள்ளது.
தற்சமயம் தனித்தனி செயலிகள் வழங்கும் வெவ்வேறு சேவைகளை பேஸ்புக் தனது தளம் மற்றும் செயலிகளில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வெப்பநிலை, கேம்ஸ், என பல்வேறு வசதிகள் பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் வழங்கியுள்ள புதிய வசதி இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.