சிறீங்காவில் நாளைய தினம் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சு மாற்றப்பட்டு அவருக்கு நிதித்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கள் வழங்கப்படலாம் என கடந்தவாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் நாளை மறுதினம் அவுஸ்ரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை முன்னெடுக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பயணம் மேற்கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் சிறீலங்கா ஜனாதிபதி முதலில் கன்பரா செல்லவுள்ளதுடன் அங்கு அவுஸ்ரேலியத் தலைவர்களைச் சந்தித்து விட்டு இரவு அங்கு தங்குவார்.
அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல் மற்றும் ஆளுனர் சேர் பீற்றர் கொஷ்குரோவ் உள்ளிட்டோரைச் சந்திக்கும் சிறீலங்கா ஜனாதிபதி மறுநாள் சிட்னி செல்வார்.
அங்கு பல்வேறு சந்திப்புகளை நடத்தும் அவர் அன்றிரவு அங்கு தங்குவார். வரும் வெள்ளிக்கிழமை சிறீலங்கா ஜனாதிபதி அங்கிருந்து சிறீலங்காவுக்குப் புறப்படுவார்.
சிறீலங்கா ஜனாதிபதியுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர் அஜித் பெரேரா ஆகியோரும் அவுஸ்ரேலியா செல்லவுள்ளனர்.
சிறீலங்கா அதிபர் ஒருவர் அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.