அவுஸ்ரேலியாவிற்குள் படகுகள் மூலம் பிரவேசித்துள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, அகதி அந்தஸ்துகோரி விண்ணப்பிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நான்கு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது பாதுகாப்புக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய குடிவரசு அமைச்சர் பீற்றர் டட்டன் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் இருந்து போருக்கு முன்னரும் போரின் பின்னரும் ஆபத்தான கடல்வழிப்பயணங்களை மேற்கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்ரேலியாவில் புகலிட தஞ்சம் கோரியிருந்தனர்.
இலங்கையை தவிர ஏனைய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அகதி தஞ்சம் கோரி, அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர்.
இந்த நிலையில் அகதிகள் தொடர்பான நெருக்கடி அதிகரித்ததை அடுத்து கடுமையான குடிவரவு கொள்கைகளை முன்னைய தொழிற்கட்சி அரசாங்கம் அமுல்படுத்தியிருந்ததுடன், அவுஸ்திரேலியாவின் தற்போதைய லிபரல் அரசாங்கம் அவ்வாறான கொள்கையை பின்பற்றிவருகின்றது.
எனினும் புகலிடம் கோரி நாட்டுக்குள் பிரவேசித்துள்ள சிலர் புகலிட விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவில்லை என குறிப்பிட்ட பீற்றர் டுட்டன், ஏனையவர்கள் தமது அடையாளம் தொடர்பான அடிப்படை தகவல்களை வழங்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் புகலிடம் கோரியுள்ள தமிழ் மக்களும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை அவுஸ்திரேலியாவில் செயற்படும் அகதிகளுக்கான செயற்பாட்டாளர் பாலா விக்னேஸ்வரனிடம் பெற்றுக்கொள்ளலாம்.