தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – மெல்பேர்ண்
அவுஸ்திரேலியா மெல்பேர்ண்நகரில் உணர்வெழுசிசியுடன் நடைபெற்ற மே- 18 தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நினைவுநாள். கடந்த 2009-ம்ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் சிங்களப்பேரினவாதஅரசினால் தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்புப்போரின்போது காவுகொள்ளப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் எட்டாவது ஆண்டுநினைவுதினமும் காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவான தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் மெல்பேர்ண்நகரில் கங்கேரியன் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
18-05-2017அன்று மாலை 6.30மணிக்கு மண்டப நினைவேந்தல்நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வை செல்வி மது பாலா அவர்களும் (தமிழ்மொழியிலும்) திரு ஆதவன் சிறீதரன் அவர்களும் (ஆங்கிலமொழியிலும்) தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள்.
நினைவேந்தல்நிகழ்வின் முதல்நிகழ்வாக இதுவரைகாலமும் சிங்களப்பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் நினைவாக முதன்மைச்சுடர் ஏற்றப்பட்டது. இந்த முதன்மைச்சுடரினை முள்ளிவாய்க்கால்ப்பேரவலத்தின்போது அதில் சிக்குண்டு அதிலிருந்து மீண்டுவந்தவர்களில் ஒருவரான திரு தர்மசீலன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து அவுஸ்திரேலியத்தேசியக்கொடியை அவுஸ்திரேலியச்சமூகத்தைச்சேர்ந்தவரும் தமிழ் ஏதிலிகள் செயற்பாட்டாளருமான Miss Ashleigh Kumar அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத்தேசியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் செல்வன் சயிந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால்மனிதப்ப்பேரவலத்தில் பலியாகிய பொதுமக்களின் நினைவான திருவுருவப்படத்திற்கு முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்த திரு கரிதாஸ்அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
அடுத்து தாயகவிடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் அரசபடையினரால் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களையும் குறிப்பாக முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தில் பலியாகிய பொதுமக்களையும் உள்ளத்தில் நினைந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மலர்வணக்கத்தையடுத்து அரங்கநிகழ்வுகளாக நினைவுரையினை முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் இறுதிநாட்கள்வரையிலும் மருத்துவப்பணிபுரிந்து தற்போது புலம்பெயர்ந்துவாழும் வைத்தியகலாநிதி திரு வரதராஜா அவர்களின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட உரையின் காணொளிப்பதிவு அகலத்திரையில் திரையிடப்பட்டது. அவர் தனதுரையில் “2006-ம்ஆண்டு தான் திருகோணமலை முதூர் வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றியபோது அவ்வைத்தியசாலைமீது அரசபடையினர் எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றும் அதில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கும் மட்டக்களப்புமாவட்ட வைத்தியசாலைக்கும் எடுத்துச்செல்வதற்கு அரசபடையினர் போக்குவரத்துப்பாதைகளை தடைசெய்து முதூர் வைத்தியசாலைத்தாக்குதல்ச்சம்பவத்தை வெளியுலகத்திற்கு தெரியவராமல் இலங்கையரசு இருட்டடிப்புச்செய்தது என்றும் அதன்பின்னர் தான் இடமாற்றம்பெற்றுவந்து முல்லைத்தீவுமாவட்ட வைத்திய அதிகாரியாகப்பொறுப்பேற்றதன்பிற்பாடு வன்னியில் யுத்தம் தீவிரமடைந்நாட்களில் புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைகளமீது அரசபடையினர் எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியதோடு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் நடாத்தப்பட்ட கஞ்சிக்கொட்டில்களுக்கு முன்பாக கஞ்சிவாங்குவதற்காக வரிசையில் நின்ற பொதுமக்கள்மீது அரசபடையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதல்ச்சம்பவத்தையும் அம்பலவன் பொக்கணையில் அமைந்திருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான பால்மா வாங்குவதற்காக ஒன்றுகூடியிருந்த பெண்கள் சிறுவர்கள்மீது அரசபடையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் பல பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்ட சம்பவங்கள் உட்பட இன்னும்பல சம்பவங்களையும் சாட்சியமாக அவர் தனதுரையில் விளக்கிக்கூறினார்.”
அடுத்தநிகழ்வாக மலேசியாவை பிறப்பிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் தற்காலிகமாக வசித்துவருபவருமான செல்வன் பார்த்தீபன் அவர்களின் நாட்டியநடனம் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல்களையும் தாயகத்து அவலங்களைச்சொல்லும் சில தாயகப் பாடல்களையும் இணைத்துச் செய்யப்பட்ட பாடல்த்தொகுப்பிற்கு பார்த்தீபன் அவர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக அந்த நாட்டியநடனத்தை வழங்கியிருந்தார். நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்களின் உணர்வுகளை அவரது அந்த நாட்டியநடனம் தொட்டிருந்தது.
அடுத்து அவுஸ்திரேலியச் சமூகத்தைச்சேர்ந்தவரும் அகதிகள் செயற்பாட்டாளரும் சட்டவாளருமான MR Robert Stary அவர்களின் ஆங்கிலமொழியிலான உரை இடம்பெற்றது. அவர் தனதுரையில் “அவுஸ்திரேலியஅரசாங்கம் தமிழ் அகதிகளமீது நடைமுறைப்படுத்தும் கடுமையான சட்டங்களால் அவர்கள் அல்லற்படுவதையிட்டு தான் கவலையடையவதாகவும் 2006-ம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசினால் தமிழ் அகதிகள் இலக்குவைக்கப்பட்ட காலப்பகுதியிலேயே தான தமிழ் அகதிகள்மீது அதிக கரிசனைகொண்டதாகவும் தமிழ் அகதிகளின் உரிமைகளுக்காக தான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து தாயகத்திலிருந்து மனிதவுரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டவாளருமாகிய திரு சுகாஸ் அவர்களின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட உரையின் காணொளித்தொகுப்பு அகலத்திரையில் திரையிடப்பட்டது. அவர் தனதுரையில் “தாயகத்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் இலங்கையில் வரப்போகின்ற அரசியலமைப்புத்திருத்தத்தில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை மிஞ்சாத ஒரு தீர்வே வரப்போகின்றது என்ற கசப்பான உண்மையையும் கூறிக்கொள்வதோடு அவற்றை இருகரங்களாலும் கையேந்திப்பெறுவதற்கு தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தயாராகிவருகின்றது. ஆதலால்த்தான் தமிழ்மக்கள் தங்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைகளுக்கு எதிராகப்போராடவேண்டிய சூழல் உருவாகியிருக்கின்றது என்றும் தமிழ்த் தேசியத்திற்காக ஒரு மாற்றுத்தலைமை அல்லது ஒரு மாற்றுக்கட்சி அவசியம் என்று குறிப்பிட்டதோடு நிலத்திலும் புலத்திலும் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டு நாம் அனைவரும் ஒருகுடையின்கீழ் அணிதிரண்டு எமது உரிமைகளுக்காக ஜனநாயகவழியில் தொடர்ந்து போராடுவோமாக என வேண்டிக்கொள்வதோடு அதிலிருந்து நாம் தவறுவோமானால் எமது விடுதலைக்காக மரணித்த மாவீரர்களதும் மக்களதும் ஆத்மாக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்காது” என்றும் குறிப்பிட்டார்.
அடுத்து சமூகஅறிவித்தல்களின்பின்னர் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் இரவு 8.15மணியளவில் தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நினைவுநாள் 2017 நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – சிட்னி
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. இன்று 18 – 05 – 2017வியாழக்கிழமைமாலை 7மணிக்கு வென்வேத்வில் றெட்கம்மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, தேசியக்கொடியேற்றலுடன் தொடங்கிய நினைவு நிகழ்வில் மரணித்துப்போன உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைவரும் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து இனவழிப்பு நினைவுநாளில் கவனயீர்ப்பு நிகழ்வாக றொக்வுட் தமிழர் நினைவிடத்திலிருந்து நடைபயணமாக 20 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாக 5 இளையோர்கள் நினைவஞ்சலி நடைபெற்ற இடத்தை வந்தடைந்து மலர்அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மண்டபத்தை வந்தடைந்த இளையோர் ஒருவர் நடைபவனியின் நோக்கத்தை எடுத்துக்கூறி தொடர்ந்து நாம் போராடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கிறான்வில் தொகுதியின் மாநில அவைஉறுப்பினர் Julia Finn கருத்துரை வழங்கினார். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட அடக்குமுறைகளை விளங்கிக்கொள்வதாகவும் இன்னமும் தமிழர்களுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது எனவும் அதற்காக தான் குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்ச்செயற்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி சாம்பவி உரையாற்றும் போது, எமக்கான விடுதலையை பெற்றுக்கொள்வதற்கு நாம்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழர்களின் தேசம் விடுதலை பெறும்வரை தமிழர்கள் தொடர்ந்தும் குரல்கொடுக்கவேண்டும் எனவும் தமிழிலும், ஆங்கிலத்திலும் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டு எழுத்தாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளருமான முத்துக்கிருஸ்ணன் கருத்துரை வழங்கினார். அவர் தனதுரையில் தமிழ்மக்களின் பிரச்சனைகளை அன்றைய காலத்தில் தான் அறிந்திருக்கவில்லை எனவும் ஊடகங்கள் அவற்றை வெளியில் கொண்டுவரவில்லை எனவும் குறிப்பிட்டார். அத்தோடு தமிழ் நாட்டிலுள்ள 80000 க்கு மேற்பட்ட ஈழத்துதமிழர்கள் அகதிகளாக அன்றி, அத்துமீறியவர்களாகவே கணிக்கப்பட்டு வைத்திருக்கப்படுகின்றார்கள் எனவும் அவர்களது விடிவிற்காகவும் நாங்கள் உழைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக தேசியக்கொடியிறக்கலை தொடர்ந்து வணக்க நிகழ்வுகள் மாலை 9 மணிக்கு நிறைவுபெற்றது.