சென்னை துறைமுகத்துக்கு வந்த அவுஸ்ரேலிய போர்க்கப்பலுக்கு இந்திய கடலோர காவல் படை சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவுஸ்ரேலிய நாட்டு கடல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ‘ஏ.பி.எப்.சி. ஓஷன் ஷீல்டு’ நவீன ரக போர்க்கப்பல் சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நல்லெண்ண பயணமாக சென்னை துறைமுகத்துக்கு நேற்று (18) வந்தது.
இந்த கப்பல் கடலோர பாதுகாப்புக்காக ரூமேனியா நாட்டில் கட்டப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
8500 டன் எடை கொண்ட இந்த கப்பல் 110.9 மீட்டர் நீளமும், 22.05 மீட்டர் அகலமும் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 16 கடல் மைல் தூரம் செல்லும் திறன் உடையது. சரக்குகள் மற்றும் போர் தளவாடங்களை கையாள 1000 சதுர மீட்டர் அளவு இடவசதி மேல் தளத்தில் உள்ளது. கப்பலின் மேல்தளத்தில் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளது.
மாயமான மலேசிய நாட்டு விமானம் ‘எம்.எச்.370’-யை தேடும் பணியில் ஓஷன் ஷீல்டு கப்பலும் ஈடுபட்டது.
சென்னை துறைமுகத்துக்கு வந்த ஆஸ்திரேலிய போர்க்கப்பலுக்கு இந்திய கடலோர காவல் படை சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கப்பல் கேப்டன் ஆலன் சாம்ப்கின் தலைமையில் 16 கடற்படை அதிகாரிகள், 36 கடற்படை வீரர்களும் வந்து உள்ளனர்.
அவர்களுக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்ட குங்குமம் திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று இந்திய கடலோர காவல் படையுடன் ஆஸ்திரேலிய கடலோர காவல் படை விளையாடும் நட்புறவு கைப்பந்து போட்டி நடக்கிறது.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவுஸ்ரேலிய வீரர்கள் பங்கேற்கிறார்கள். நாளை வங்க கடலில் இந்திய கடலோர காவல் படையுடன் கூட்டு பாதுகாப்பு ஒத்திகையில் ஆஸ்திரேலிய கடலோர காவல் படையினர் ஈடுபடுகின்றனர். அதன் பின் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.