எதிர்காலத்தில் சிறீலங்காவில் அவுஸ்ரேலியா மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் பற்றி நான் நேற்று(17) ஆரம்பித்து வைத்துள்ள “இணைந்ததே சிறந்தது” எனும் புகைப்படக் கண்காட்சி விபரிக்கின்றதென சிறீலங்காவின் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் தெரிவித்தார்.
அவுஸ்ரேலியா மற்றும் சிறீலங்காவிற்கிடையிலான 70 வருடகால அபிவிருத்திக் கூட்டுறவைக் கொண்டாடும் வகையில், திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ‘இணைந்ததே சிறந்தது’ புகைப்படக் கண்காட்சியை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதேசிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 7 தசாப்த காலத்தில், சிறீலங்காவின் கிழக்குப் பிராந்தியம் உட்பட, நாட்டின் சகல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலியா பல வழிகளிலும் உதவி வழங்கியுள்ளது.
அவுஸ்ரேலியாவின் இத்தகைய உதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான, சுகாதார, கல்வி, மற்றும் வேலை வசதித் திட்டங்கள் ஊடாக, சிறீலங்கா மக்கள் எவ்வாறு நன்மையடைந்துள்ளார்கள் என்பதை இந்தக் கண்காட்சி பிரதிபலிக்கினறது.
அரசாங்கத்தின் சகல மட்டங்கள், சிவில் சமூகம், தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட பங்காளித்துவ அடிப்படையிலான நடவடிக்கைகளே இந்தத் திட்டங்களின் வெற்றிக்குக் காரணமாகும்.
எதிர்காலத்தில் சிறீலங்காவில் அவுஸ்திரேலியா மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட் டங்கள் பற்றியும் கண்காட்சி விபரிக்கின்றது. எமது புதிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும், முக்கியமாக பெண்களுக்கும், பொதுவாக இலங்கை மக்கள் அனைவருக்கும் மேம்பட்ட மேலதிக வேலை வசதிகளை உருவாக்கவென தனியார் துறையினருடன் புதிய வழிவகைகளில் பங்காளித்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புதிய திட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டம் என்பனவற்றில் மேற்கொள்ளப்படும் தொழிற்திறன் அபிவிருத்தி மூலம், சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் எமது புதிய ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கான தொழிற்திறன் திட் டம் பற்றி நாம் முக்கியமாக உற்சாகமடைந்துள்ளோம்.
அவுஸ்திரேலியாவின் அபிவிருத்தி உதவிகளில் கல்வி முக்கிய இடம்பெற்றுள்ளது. ‘எமது பங்காளித்துவ நடவடிக்கைகளின் அடிப்படையில் நாம் பாடசாலைகளைப் புனரமைத்துள்ளோம், கல்வித் திட்டங்களை அபிவிருத்தி செய்துள்ளோம், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம், இளைஞர் யுவதிகளின் கல்விக்கான வழிவகைகளை மேம்படச் செய்துள்ளோம்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் புலமைப் பரிசில்களை வழங்குவதன் மூலம் ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையின் இளம் சமுதாயத்தினருக்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு உதவி வழங்கியுள்ளது.
இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கும் நீண்ட காலமாக அவுஸ்ரேலியா உதவியுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, கண்ணிவெடி அகற்றல், வீடமைப்பு, பாடசாலைகள், வீதிகள், சந்தைக் கட்டடங்கள் புனரமைப்பு என்பனவற்றிற்கு பெரிதும் தேவைப்பட்ட உதவியை அவுஸ்ரேலியா வழங்கியதோடு, புதிய தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கியுள்ளது.
இதேபோல, சுனாமிக்குப் பிந்திய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் அவுஸ்ரேலியா உதவி வழங்கியுள்ளது. இலங்கை மக்கள், அவுஸ்ரேலிய சமூகத்திற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புக்களைக் கொண்டாடும் முகமாக இந்தக் கண்காட்சியில், புகைப்படங்கள் தொடர்படங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்ரேலியாவின் பல்லின கலாசார வாழ்க்கைக்கு பாரியளவிலான, சக்தி வாய்ந்த, சிறீலங்கா சமூகத்தினர் வழங்கிய பங்களிப்பின் சிறிய அளவிலான பிரதிபலிப்பே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை பொதுமக்கள் பார்வையிட முடியும்.