ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி மாணவரான செயான் ஷாஃபீக் தனக்கென சமூக வலைத்தள செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவரது உழைப்பில் உருவான கேஷ்புக் பற்றி வரிவாக பார்ப்போம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத்தள சேவைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 16-வயதான பத்தாம் வகுப்பு மாணவரான செயான் ஷாஃபீக் கேஷ்புக் என்ற பெயரில் தனக்கென சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற செயான் கேஷ்புக் செயலியை 2013 ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தார், எனினும் தற்போதைய சமூக வலைத்தளங்களுக்கான தடை இவரது செயலியை பிரபலப்படுத்தியுள்ளது. தனது நண்பரான உசைர் ஜெயினுடன் இணைந்து கேஷ்புக் செயலியை மே 2-ந்தேதி மீண்டும் வெளியிட முடிவு செய்தார்.
தனது பகுதியை இணைப்பில் வைத்திருக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், இந்த தடை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள கேஷ்புக் தற்சமயம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியை தற்சமயம் பயன்படுத்தி வருபவர்களில் பலரும் செயலியின் அம்சங்கள் பயனுள்ளதாக இருப்பதை தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்துடன் தொடர்புடைய கேஷ்புக் செயலி, அதன் பயனாளிகளை காஷ்மீர் மொழியில் இயக்கவும் வழி செய்கிறது. தனது 11 வயது முதல் கோடிங் பாடங்களை கற்று வந்த செயான் அடுத்தடுத்து சி++ மற்றும் ஜாவா உள்ளிட்ட பாடங்களையும் கற்று கொண்டார்.
சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலானோர் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்களை பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில், செயான் தனது சமூக வலைத்தளத்தின் சேவைகளை மேலும் நீடிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் காஷ்மீரில் உருவாக்கப்பட்டுள்ள பொருட்களை விள்ம்பரம் செய்யவும் செயான் முடிவு செய்துள்ளார்.