பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த இருவிடயங்களையும் அரசு கருத்தில் கொண்டு, எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க வேண்டும் என இன்றைய போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, ‘சேயாவிற்கு ஒரு நீதி, வித்தியாவிற்கு ஒரு நீதியா?’, ‘காவுகொள்ளப்பட்ட எம் உயிருறவுகளுக்கு நீதி வேண்டும்’, ‘தமிழ் அரசியல் தலைமைகளின் மௌனம் ஏன்?’, ‘பணமும் பதவிகளும் தமிழர்களை முடக்கலா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.