பப்புவா நியு கினியின் லை (Lae) பகுதியில் உள்ள பிமோ (Buimo) என்ற சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 17 கைதிகள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது சிறைச்சாலையில் இருந்த சுமார் 57 சிறைக்கைதிகள் தப்பியோடியதாகவும் அவர்களில் மூவர் காவல் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தப்பியோடிய சிறைக்கைதிகள் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய சிறைக்கைதிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த தலைமை காவல் துறை கண்காணிப்பாளர் அந்தோனி வகாம்பீ (Anthony Wagambie), “தப்பியோடிய கைதிகள் பலர் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஆயுத கொள்ளை, கார் திருட்டு, வீடு மற்றும் விற்பனை நிலையங்களை உடைத்து திருடியவர்கள் என பலர் அதில் உள்ளடங்குவர்” என தெரிவித்தார். அத்துடன், தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் சரணடையுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிமோ சிறைச்சாலையில் இதற்கு முன்னரும் இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.