ஆஸ்திரேலியாவில் கல்விகற்கும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள், வீடு தேடும் போதும் வேலை தேடும் போதும் ஏமாற்றப்படுகிறார்கள்.
அவர்கள் நம்பிப் பணம் கொடுக்கும் வீடுகளும் இல்லை, தேடிச்சென்ற வேலையும் உண்மையானதில்லை.
வெளிநாட்டு மாணவர்கள், குறிப்பாக சீனாவிலிருந்த்து வந்தவர்கள், yeeyi.com எனும் ஒரு வலைத்தளத்தளத்தைப் பயன்படுத்துவதாக Monash detective Senior Constable Chris Duke கூறினார். இந்த வலைத்தளத்தினூடாக மெல்பேர்ண் நகர் மற்றும் Southbank போன்ற இடங்களில் மாணவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க அதிகமாகத் தேடுகிறார்கள்.
ஆனால், இந்த வலைத்தளத்தில் தமக்குப் பிடித்தமான ஒரு வீட்டைத் தெரிந்தெடுத்தவுடன், வீட்டு உரிமையாளர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் தொடர்பு கொண்டு வீட்டு வாடகை ஒப்பந்தம் ஒன்றை அனுப்பி வைப்பார். அங்கு தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, ஒரு மாத வாடகையை முன்பணமாக மாணவர் அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக ஒரு ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கும் கொடுக்கப்படும். மாணவர், வீட்டு வாடகை என்று கட்டும் பணம் இன்னொரு மாணவர் கணக்கிற்குச் செல்கிறது என்பது பணம் கட்டும் மாணவருக்குத் தெரியாது.
மறுபக்கம் பார்த்தால், வேலை தேடி செல்லும் மாணவர் ஒருவர் இதே வலைத்தளத்தைப் பயன்படுத்தும்போது, அவருக்கு வேலை வழங்கப்பட்டு, இரண்டு வாரங்களின் பின் அவர் வேலையை ஆரம்பிக்கலாம் என்றும் கூறப்படும். அவரது சம்பளத்தை எங்கே அனுப்புவது என்று, வங்கி விபரங்களும் பெறப்படும்.
முதல் மாணவர் வீட்டு வாடகையைக் கட்டியதும், இரண்டாவது மாணவரை ஏய்ப்பவர்கள் அழைத்து, “மன்னிக்க வேண்டும், தவறாக உங்கள் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் உடனேயே திருப்பிக் கையளிக்க வேண்டும்” என்று கோரப்படும். ஐயையோ, முதலாளியிடம் சிக்கலில் மாட்டவேண்டாமே என்று நினைக்கும் இரண்டாவது மாணவர், உடனேயே அந்தப் பணத்தை வங்கியிலிருந்து காசாக எடுத்து, ஏய்ப்பவர் கூறும் பணமாற்று நிறுவனம் மூலம் வெளிநாட்டுக் கணக்கிற்கு அனுப்பிவிடுவார்.
ஆக, இரண்டு மாணவர்களுக்கும் ஆப்பு.
கடந்த எட்டு மாதங்களில் குறைந்தது பன்னிரண்டு பேராவது இப்படி ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்று, Chris Duke கூறினார்.
இப்படியான தில்லுமுல்லு நடப்பது உங்களுக்குத் தெரிந்தால், Crime Stoppersஐ 1800 333 000 என்ற இலக்கத்தில் அழைத்து முறையிடவும்.