நிலாவில் வாழும் சீன மாணவர்கள்

நிலாவைப் போன்று உருவகப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் சீன மாணவர்கள் 8 பேர் 200 நாட்கள் தங்க உள்ளனர். நிலாவில் மனிதர்களைத் தங்க வைப்பதை நீண்ட கால செயல்திட்டமாகக் கொண்டுள்ள சீனா, மாணவர்களை இம்முயற்சியில் களமிறக்கியுள்ளது.

யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ஆராயும் பணிக்கு முன்னோட்டமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 2036 ஆம் ஆண்டு நிலாவில் மனிதன் குடியேறுவற்கான பணிகள் நிறைவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்” சீன அதிபர் ஜி ஜின்பிங்.

இம்மாணவர்களில் 4 பேர் கொண்ட முதல் குழு, 60 நாட்களும், 4 பேர் கொண்ட இரண்டாவது குழு 200 நாட்களும் தங்குவார்கள். இந்த ஆய்வகத்தில் ஒரு சிறிய தங்குமிடம் மற்றும் இரண்டு தாவரங்களுக்கான பசுமைக்கூடம் இருக்கும். சீனா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலா கிராமத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.