இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கெனத் தனியே செயலிகளும் உள்ளன. இருப்பினும், இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் நோட்பின் தளத்தை அதன் படு எளிமையான தன்மைக்காக முயன்று பார்க்கலாம்.
நோட்பின் தளத்தைப் பயன்படுத்த, குறிப்புகளை எழுத, சேமிக்க, அதில் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கிக்கொள்ளலாம். இதற்கு முகப்புப் பக்கத்தில் மனதில் உள்ள எண்ணங்களை டைப் செய்தாலே போதுமானது.
முதலில் குறிப்பேட்டுக்கான ஒரு இணைய முகவரி உருவாக்கித் தரப்படும். அதைக் கொண்டு, புதிய குறிப்பேட்டை உருவாக்கிக்கொள்ளலாம். மீண்டும் தேவை எனில் அதே முகவரியை டைப் செய்து குறிப்புகளை அணுகலாம். பழைய குறிப்புகளில் திருத்தங்கள் செய்யலாம். புதிய குறிப்புகளைச் சேமிக்கலாம்.
குறிப்புகளுக்குத் தலைப்பிடலாம். பழைய குறிப்புகளைத் தேடிப்பார்க்கலாம். இவற்றுடன் ஒலிக்குறிப்புகளை இணைக்கலாம். எளிமையான சேவைக்குள் இப்படிப் பல வசதிகள் இருக்கின்றன.
இணைய முகவரி: https://notepin.co/