அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று விளையாடுவதற்கு முன்னோட்டமாக, அங்குள்ள பாதுகாப்பு குறித்து பார்வையிட பாதுகாப்புக்குழு அடுத்த வாரம் வங்காள தேசம் செல்கிறது.
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. அவுஸ்ரேலிய அணி வங்காள தேசத்திற்கு புறப்படும் நிலையில் பாதுகாப்பு காரணமாக வங்காள தேச தொடரை ரத்து செய்தது.
வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் தீவிர முயற்சியின் காரணமாக வரும் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் வங்காள சேதம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக அவுஸ்ரேலியாவின் பாதுகாப்புக் குழு இந்த மாதம் மத்தியில் வங்காள தேசம் செல்ல இருக்கிறது.
அந்தக்குழு போட்டி நடைபெறும் இடம், வீரர்கள் தங்கும் ஹோட்டல் மற்றம் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்ய இருக்கும் பாதுகாப்பு குறித்து பார்வையிடும். பின்னர் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் இதுகுறித்து அறிக்கை சமர்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் வங்காள தேசம் சென்று விளையாடுவது குறித்து இறுதி முடிவு செய்யும்.
தற்போதைய போட்டி அட்டவணைப்படி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆகஸ்ட் 18-ந்திகதி டாக்கா சென்றடைவார்கள். 22-ந்திகதி முதல் 24-ந்திகதி வரை இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். இந்த போட்டி சிட்டகாங்கில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் 27-ந்திகதி முதல் 31-ந்ததிகதி வரை சிட்டகாங்கிலும், 2-வது டெஸ்ட் செப்டம்பர் 4-ந்திகதி முதல் 9-ந்திகதி வரை மிர்புரிலும் நடக்கிறது.