அவுஸ்ரேலிய வரவு செலவுத் திட்டத்தை, கருவூலக்காப்பாளர் Scot Morrison நேற்றிரவு (9) 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகம் – new temporary sponsored parent visa வருடத்துக்கு சுமார் 15,000 பேர் தலா $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை new temporary sponsored parent visa திட்டத்தின் கீழ் இங்கு அழைத்துவந்து மூன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் வரை தம்முடன் தங்கவைக்கலாம்.
இதன்மூலம் அரசுக்கு $99 மில்லியன் டொலர்கள் வரை கிடைக்கவுள்ளது. ஆண்டுதோறும் 15000 விசாக்கள் வழங்கும் இத்திட்டம் இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படவுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லது அவுஸ்ரேலிய நிரந்தரக் குடியிருப்பாளர்கள், அல்லது தகுதியான நியூசிலாந்து குடிமக்களாக இருப்போர் தமது தாய் தந்தையரை இவ்விசாத் திட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியா அழைத்துவரலாம்.
உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. மனிதாபிமானத் திட்டத்தின் கீழ் உள் வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை 16,250 ஆக உயர்கிறது. மேலும் 2018-19ம் நிதியாண்டில் இவ்வெண்ணிக்கை 18,750 ஆக உயர்த்தப்படவுள்ளது. இதில் 1000 இடங்கள் தனியார் நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் முதல் வருடத்துக்கு அனுசரனை அதாவது sponsor செய்யும் ‘தனியார் sponsorship’ திட்டமொன்றும் அடங்குகிறது.
நிரந்தர வதிவிடம் உள்ளவர்கள் கல்விகற்க இனி சலுகை இல்லை!
நிரந்தரமாக அவுஸ்ரேலியா வில் வாழும் உரிமை எனப்படும் Permanent Residency – எனும் விசாவில் வந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வேண்டுமானால் அவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம் போன்று முழுக் கட்டணமும் செலுத்தவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
தற்போது பல்கலைக்கழகங்களின் படிப்புச் செலவுக்கு அரசு மானியம் அல்லது நிதி உதவி செய்கிறது. ஆனால் நாட்டில் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே அரசு அவர்களின் கல்விக்கு கட்டண சலுகை வழங்கும் என்றும் நிரந்தரமாக அவுஸ்ரேலியா வில் வாழும் உரிமை எனப்படும் Permanent Residency பெற்று இங்கு வாழ்கின்றவர்கள் அவர்களுக்கான முழுக் கல்விக் கட்டணத்தை அவர்களே செலுத்தவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை New Zealand குடியுரிமை பெற்று அவுஸ்ரேலியாவில் வாழ்கின்றவர்களுக்கும் பொருந்தும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
படகு வழி வந்தோருக்கு Centrelink நிதி உதவி இரத்தாகிறது!
படகு வழி வந்து தங்களது விசா நிலைமை என்ன என்று அவ்வப்போது குடிவரவுத்துறையை அணுகாமல் இருக்கின்றவர்களுக்கான Centrelink நிதி உதவி, மற்றும் வீட்டுவாடகை உதவிகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆனாலும் இவர்களுக்கு உடல் நலம் சார்ந்த மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 2,000 க்கும் அதிகமான புகலிடம் கோருவோர் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகலிடம் கோருவோருக்கான புதிய கட்டுப்பாடு மூலம் அரசுக்கு எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 50 மில்லியன் டாலர் நிதி சேமிக்க இயலும்.