மின்சார ஜெட் விமானம்!

மின்சாரத்தைக் கொண்டு பறக்கும் ஜெட் விமானத்தை, ஜெர்மனியிலுள்ள லிலியம் என்ற நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்துள்ளது.இரண்டு பேர் அமரும் வசதி கொண்ட, ‘ஈகிள்’ என்ற அந்த விமானத்திற்கு, வழக்கமாக விமானங்களுக்குத் தேவைப்படும் ஓடு பாதை தேவையில்லை.

ஏனெனில், ஹெலிகாப்டரைப் போல தரையிலிருந்து நேரடியாக மேலே கிளம்பவும், மேலிருந்து கீழே இறங்கவும் உதவும், ‘வீடோல்’ தொழில்நுட்பத்தை ஈகிள் பயன்படுத்துகிறது.

இறக்கைகளில் வேகமாக இயங்கும் மின் விசிறிகள் பல உள்ளன. விசிறிகளை தரையை நோக்கித் திருப்பினால், விமானம் மேலே உயரும். மேலே சென்றதும், விசிறிகளை குறுக்குவாக்கில் திருப்பினால், விமானம் வேகமாக பறந்து செல்லும்.

ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 300 கி.மீ., துாரத்தை ஈகிளால் பறந்து கடக்க முடியும். அதிகபட்ச வேகமாக மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் அது பறக்கும் என்பதால் தான், அதை ஜெட் விமானம் என்று லிலியம் சொல்கிறது.