யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்று (9) வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதால், உள்ளே செல்ல முடியாது திரும்பி சென்றார்.
கடந்த பெப்ரவரி 27ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு இன்றைய தினமே தீர்வொன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்க வேண்டும் என்று போராட்டக்கார்கள் தெரிவித்தனர்.
எனினும் இது மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம், அதன்படி ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நான் உங்களுக்கு வழங்கியிருக்கின்றேன். இது சம்பந்தமாக நான் ஜனாதிபதியுடன் பேசிவிட்டு வந்திருக்கின்றேன். இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசாங்கமே என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன் போது கூறினார்.
எவ்வாறாயினும் முதலமைச்சரின் இந்தக் கூற்றுக்களை ஏற்றுக் கொள்ளாத வேலையற்ற பட்டதாரிகள் முதலமைச்சரை வடமாகாண சபையின் உள்ளே செல்லவிடாது தடுத்ததால் முதலமைச்சர் திரும்பி சென்றுள்ளார்.