கையடக்க ஒலிப்படக் கருவி

லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரியைச் சேர்ந்த இரு முனைவர் பட்ட மாணவர்கள், பேனா அளவுக்கே உள்ள, ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்’ எனப்படும் மீஒலி வருடியை உருவாக்கியுள்ளனர்.

செவி உணரா ஒலி அலைகள் மூலம் உடலுக்குள் இருக்கும் அங்கங்களை திரையில் படமாக காட்டும் திறன் கொண்டவை மீஒலி வருடி. பலவித நோய்களை அறிவதற்கு உதவுவதோடு, கருவுற்ற குழந்தையின் நலனை அறியவும் உதவும் இக் கருவி, அளவில் பெரிதாகவும், விலை அதிகமாகவும் இருப்பதால், வளரும் நாடுகளில், குறிப்பாக கிராமப்புற மருத்துவமனைகளில் இது இன்றும் எட்டாக் கனி தான்.

உயிரிப் பொறியியல் ஆராய்ச்சியாளர்களான ஹமித் சுலைமான் மற்றும் கிரகாம் பெய்டன் ஆகியோர், மீஒலிக் கருவியின் உள்ளே இருக்கும் மின்னணு பாகங்களை, ஒரு சிலிக்கன் சில்லுக்குள் அடங்குமளவுக்கு சுருக்கி வடிவமைத்துள்ளனர்.

இதனால், மருத்துவரின் சட்டைப் பையில் வைக்குமளவுக்கு சிறிதாகயிருப்பதோடு, மருத்துவரின் மொபைலிலேயே, நோயாளியின் உடல் பாகங்களை காணவும், படமெடுத்து சேமிக்கவும் முடியும்.

இரு ஆராய்ச்சியாளர்களும் தங்கள் கண்டுபிடிப்பை அதிக அளவில் தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பதற்காக, ‘மைக்ரோசோனிக்ஸ்’ என்ற நிறுவனத்தையும் துவங்கி இருக்கின்றனர்.