சமீபத்தில் ஒரு வரைபடம் இணைய உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வரைபடம் இணையத்துக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் முதல் இணைய அட்லஸ் என இது அழைக்கப்படுகிறது. இணையத்தின் பெளதீக உள்கட்டமைப்பை விவரிக்கும் வகையில் இந்த வரைபடம் அமைந்துள்ளது.
இணையம் என்பது வலைப் பின்னல்களின் வலைப் பின்னல் என்பது நமக்குத் தெரியும். அது உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களாகவும் சர்வர்களாகவும் பரவியிருக்கிறது. டேட்டா சென்டர்களால் இணைக்கப்பட்டு, கடலுக்கடியிலான கேபிள்களும் அதன் இணைப்புகளாக அமைந்துள்ளன. ஆனால், இந்த பெளதீக உள்கட்டமைப்பின் விவரம் மிகவும் சிக்கலானது.
இந்த விவரங்களைச் சித்தரிக்கும் வரைபடத்தை அமெரிக்காவில் விஸ்கான்சின் மேடிசன் பல்கலையில் உள்ள ஆய்வாளர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளனர். இந்தியாவை சேர்ந்த ஆய்வாளர் ராமகிருஷ்ணன் துரைராஜன் என்பவரும் இந்த வரைபட உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
இந்த இணைய வரைபடம் இணைய உள்கட்டமைப்பு குறித்துப் புரிந்துகொள்ள உதவுவதோடு, பருவநிலை பாதிப்பு, தீவிரவாதத் தாக்குதல் போன்றவற்றிலிருந்து இணையத்தைப் பாதுக்காக்கவும் உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை வைத்துக்கொண்டு அவற்றில் உள்ள தகவல்களை இணையம் மூலம் ஒருங்கிணைத்து இந்த இணைய அட்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தின் அமைப்பைக் காட்சிரீதியாக இந்த அட்லஸ் விளக்குகிறது.
இணைய அடல்ஸ் முகவரி: http://internetatlas.org/