பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணான பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதை பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சோனு சூட் உருவாக்குகிறார்.

இதுகுறித்துப் பேசிய சோனு சூட், ”சிந்துவின் வாழ்க்கையைப் படமாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்கமடையச் செய்த ஒரு பெண்ணின் கதை. பெரிதாய்க் கனவு காணுங்கள்; கனவோடு நிற்காமல் கடுமையாக உழைத்து அதை அடையுங்கள் என்னும் செய்தியைத் தாங்கி நிற்பவரின் கதை.

அனைவரும் அவசியம் அறிந்து, ஊக்கமடைய வேண்டிய பயணம் இது” என்று கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் பிறந்தவர் பி.வி. சிந்து. பிரபல பேட்மிண்டன் வீரரும் பயிற்சியாளருமான கோபிசந்தின் 2001 வெற்றியைக் கண்டு உத்வேகம் கொண்ட அவர், தனது 8-ம் வயதில் விளையாட ஆரம்பித்தார்.

படம் குறித்து சிந்து பேசும்போது, ”என்னுடைய வாழ்க்கையை சோனு சூட் படம் எடுப்பதாக முடிவெடுத்ததை அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய வாழ்க்கைப் பயணம் குறித்து முழுமையான ஆராய்ச்சியை கடந்த 8 மாதங்களாக அவரின் குழுவினர் மேற்கொண்டனர். இது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கதை லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்து, இளைஞர்களை நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கத் தூண்டும்” என்றார்.

இப்படத்தில் நாயகியாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கு முன்னர் கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கைக் கதை படமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.