அவுஸ்ரேலியாவில் முதன்முறையாக, மனிதாபிமான விசாக்களில் (humanitarian visas) அகதிகளைத் தனியார் தொழில் நிறுவனங்கள் அழைக்கும் திட்டம் ஒன்று ஜூலை 1ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தனியார் நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் அனுசரனை அதாவது sponsor செய்தால், சுமார் 1000 வரையிலான அகதிகளை இங்கு அழைக்கும் ‘தனியார் sponsorship’ திட்டமொன்றை அவுஸ்ரேலிய அரசு கொண்டுவருகிறது.
தேவைப்படும் பட்சத்தில், Centrelink பணம் ஏதாவது அக்குறிப்பிட்ட அகதி எடுக்க நேரிட்டால் அப்பணத்தையும் sponsor செய்த தனி நபரோ அல்லது நிறுவனமோ அல்லது சமூகக் குழுவோ மீளச் செலுத்தவேண்டும்.
இங்குள்ள ஆள் பற்றாக்குறையுள்ள பல வியாபாரங்கள் இதனால் அதிக பலனடைவார்களென பிரதிக் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார். அகதியொருவரை sponsor செய்வதென்பது மலிவானதொரு விடயமல்ல. அகதியொருவரை sponsor செய்வதற்கு சுமார் $60,000 டொலர்கள் வரை தேவைப்படுமென அரசு கூறுகிறது. விமானக்கட்டணம், மருத்துவ பரிசோதனைகள் தவிர்த்து விசாக் கட்டணமாக சுமார் $19,000 டொலர்கள் செலுத்தவேண்டும்.
$20,000 டொலர்கள் welfare bond ஆகச் செலுத்தவேண்டும். அக்குறிப்பிட்ட அகதி Centrelink கொடுப்பனவேதும் எடுக்க நேரிட்டால், அரசு அந்த welfare bond இலிருந்து அப்பணத்தை மீள எடுத்துக்கொள்ளும்.
அகதிகளை sponsor செய்யும் நிறுவனங்கள் அந்த அகதிகளுக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கினால் அவர்கள் கொடுப்பனவுகளில் தங்கியிருக்கவேண்டிய நிலைமை ஏற்படாதெனக் தெரிவித்துள்ளார் assistant immigration minister Alex Hawke.
இத்திட்டத்தினால் அரசு, அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் 20 மில்லியன் டொலர்களை சேமிக்கலாமென எதிர்பார்க்கிறது. வருடாந்தம் 1000 அகதிகளை ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான உள்வாங்கல் திட்டத்தில் அரசு உள்வாங்குகிறது. இவ்வருடம் இதுவரை உள்வாங்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 16 இற்கு ஒருவர் தனியார்களினால் sponsor செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆனால் தனியார் நிதியுதவி மூலம் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை வழமையான அரச உள்வாங்களைவிட மேலதிகமாக இருக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளார் அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் குடியேற்ற நிபுணரான Henry Sherrell.
இப்புதிய ஏற்பாடு ஜூலை 1ம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. பாராளுமற்றில் இதற்கான வாக்கெடுப்புத் தேவையில்லை எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.