அவுஸ்ரேலியாவில் 10 ஆண்டுகள் தங்க பெற்றோர் விசா தயார்!

பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும். $20,000 செலுத்தினால் 10 ஆண்டுகள் இங்கே தங்கலாம்.

அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒரு புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை அவுஸ்ரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு (private health cover) எடுக்கவேண்டும்.

Turnbull அரசாங்கத்தின் சமீபத்திய குடிவரவுகள் மீதான மாற்றங்களில் ஒன்றாகப் பெற்றோர்களுக்கான இப் புதிய விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் படி வருடத்துக்கு சுமார் 15,000 பேர் $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை இங்கு அழைத்துவந்து 10 வருடங்களுக்குத் தம்முடன் தங்கவைக்கலாம்.

புதிய விசாவின் கீழ் இங்கு அழைத்துவரப்படும் பெற்றோர்களுக்கு அவர்களது சுகாதார/ வைத்தியத் தேவைகளுக்கான சகல செலவுகளையும் அவர்களது பிள்ளைகளே சட்டப்படி கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பெற்றோர்களுக்கு சுகாதாரக் காப்பீடு எடுக்கின்ற அதே வேளை அவுஸ்ரேலியாவில் தங்கள் பெற்றோர்களுக்கு ஏற்படுகின்ற எந்தவொரு கூடுதல் சுகாதார செலவினங்களுக்கும் பிள்ளைகள் நிதி உத்தரவாதம் (financial guarantor) அளிக்கவேண்டும்.

இங்கு குடியேறிவரும் வயதான பெற்றோர்களினால், அவர்களின் சுகாதாரம் தொடர்பில் காலப்போக்கில் வரி செலுத்துவோருக்குக் கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதாக துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke SBS இக்குத் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனை அவுஸ்ரேலியாவுக்கு மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் அநேகமான நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் $ 5,000 செலுத்தி 3 ஆண்டுகளுக்கான விசாவைப் பெறலாம். அல்லது $10,000 செலுத்தி 5 ஆண்டுகளுக்கான விசாவைப் பெறலாம். அதேவேளை மேலும் அதேயளவு பணத்தைச் செலுத்தி மற்றொரு ஐந்து ஆண்டுகளுக்கு விசாவைப் புதுப்பித்தலுக்கான ஒரு வாய்ப்பும் இந்த விசா திட்டத்தில் உண்டு.

அதிக செலவு மற்றும் அவ்விசாவில் வரும் பெற்றோருக்கான நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான பாதை இன்மை ஆகியன மிகப்பெரும் கவலை தரும் விடயங்கள் என Australian National University migration expert Henry Sherrell இதுபற்றித் தெரிவித்துள்ளார்.

இந்த விசா தொடர்பிலான சட்டதிட்டங்கள் சுகாதார செலவினங்களை அரசு கட்டுப்படுத்த உதவுகிறது. அதேவேளை விசா கட்டணமாக மில்லியன் கணக்கிலான டொலர்கள் அரசுக்கு வருவாயாகவும் கிடைக்கும். ஒதுக்கீடு செய்யப்படும் 15,000 விசாக்களும் முதல் வருடத்தில் நிரப்பப்படுமாயின் $150 million டாலர்கள் வருமானம் கிடைக்கும். இதன்மூலம் அரசு childcare – குழந்தைகள் பராமரிப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாமென துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke கூறுகிறார்.

தங்கள் பெற்றோருக்கான புதிய விசாவிற்கு நிதியளிப்பவர்கள் அவுஸ்ரேலிய குடிமக்கள் அல்லது அவுஸ்ரேலிய நிரந்தரக் குடியிருப்பாளர்கள், அல்லது தகுதியான நியூசிலாந்து குடிமக்களாக இருக்க வேண்டும்.

இந்தப் புதிய மாற்றங்களை, அடுத்தவாரம் சமர்பிக்கவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது. இது பாராளுமன்றத்தில் நிறைவேறும் பட்சத்தில் இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும்.