பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கான அமைச்சரவை அங்கிகாரத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனால், நேற்று (04) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான அங்கிகாரத்தை, கடந்த மாதம் 25ஆம் திகதியன்று, அமைச்சரவை வழங்கியுள்ளது. இது தொடர்பில் எங்களிடம் எவ்விதமான ஆலோசனையும் பெறப்படவில்லை.
இதன் மூலம் சிவில் உரிமைகள் குறைக்கப்படுவதுடன், துஷ்பிரயோகத்துக்கும் சித்திரவதைக்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கும். அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, சட்டபூர்வமான முறையில் பயங்கரவாத செயல்களைத் தடுக்கவும், தண்டிக்கவும் செய்யும் ஒரு சட்டபூர்வமான கட்டமைப்பை ஆதரிப்பதற்கு நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். எனவே அரசாங்கத்தின் சமீபத்திய முடிவின் மூலம் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். இதில் முன்மொழியப்பட்டுள்ளவை, சர்வதேச ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டுள்ளன.
பேச்சு சுதந்திரம் இல்லாமல் போவதுடன், அரசியல்வாதியாக இருந்த அசாத் சாலி, ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலைமையே இதன் மூலம் ஏற்படும். முன்மொழியப்பட்டுள்ள வரைவுக்கு அமைய, ஒரு நபர் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படும் போது, நீதவானினால், நீதி அடிப்படையில் சாதாரண உத்தரவை வழங்க இயலாதிருக்கும். சித்திரவதைகளைத் தடுத்தல், ஒப்புதல் வாக்குமூலத்தைக் கைவிடுவது போன்றவற்றுக்கு ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவை மாற்றப்பட்டன.
சில நிபந்தனைகளின் கீழ் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு தற்போதைய வரைவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதற்கு, அனுமதிக்கப்படும். பயங்கரவாதத்துடன் முற்றிலும் இணைக்கப்படாதவர்களின் உரிமைகள் மீறப்படுவதை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. சித்திரவதை செய்வதைத் தடுப்பதற்கும் காணாமல் ஆக்கப்படுவதைத் தடுப்பதற்குமான அடிப்படைத் தேவைகளை வெளிப்படையாகவும் அவசரமாக மறுசீரமைக்கவும் அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
முன்மொழியப்பட்ட வரைவானது இலங்கையின் பாதுகாப்பு அல்லது சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, குடிமகன் மீது கட்டுப்பாடற்ற நிறைவேற்று அதிகாரத்தின் வரம்பை அதிகரிக்க முயல்கிறது. சுதந்திரமான பேச்சு மற்றும் பன்முகத்தன்மையைத் தூண்டுவோரை, சித்திரவதை செய்வதற்குத் தேவையான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. எங்களுடைய குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்தும் வலியுறுத்துவதுடன்.
மரபுவழி முறையிலான கொடூரமான கடத்தல்கள் உள்ளிட்டவற்றை, தொடர்ந்து அனுமதித்துகொண்டிருக்கவும் முடியாது என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.