அவுஸ்ரேலியாவில் இந்திய ‘கேசர்’ மாம்பழங்களுக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற ‘கேசர்’ வகை மாம்பழங்கள் முதன்முறையாக அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றின் இனிய சுவைக்கு அங்குள்ள மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

குளுமைப் பிரதேசமாக அறியப்படும் ஆஸ்திரேலியா நாட்டுக்கு மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. மாம்பழ சாகுபடியில் படிப்படியாக முன்னேறிவரும் இந்தியாவும் உள்நாட்டு தேவைக்குப் போக மிஞ்சியுள்ள மாம்பழங்களை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்நிலையில், நமது நாட்டில் ‘கனிகளின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழங்களை முதன்முறையாக அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களை அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அவுஸ்ரேலியாவில் உள்நாட்டு மாம்பழ சீசன் ஓய்ந்த பின்னர் இந்தியாவில் விளையும் அல்போன்ஸா, கேசர் போன்ற உயர்வகை மாம்பழங்களை தங்களது நாட்டில் இந்தியா சந்தைப்படுத்திக் கொள்ள கொள்கை அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா நாட்டின் மாம்பழ வர்த்தக கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் கிரே சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து முதன்முறையாக 400 டிரேக்களில் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ‘கேசர்’ வகை மாம்பழங்கள் சிட்னி நகரத்தை வந்தடைந்தன.

இந்த மாம்பழங்கள் வழக்கமாக இங்கு கிடைக்கும் மெக்சிகோ நாட்டு மாம்பழங்களைவிட சுவையில் சிறப்பாக இருப்பதால் இவற்றுக்கு உள்நாட்டு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாக அந்நாட்டின் பிரபல இறக்குமதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மைக்கேல் சைமோனேட்டா தெரிவித்துள்ளார்.

எனினும், மெக்சிகோ மாம்பழங்களைப் போல் இவற்றின் மேல்தோல் பளப்பளப்பாக இல்லை. சற்று பொலிவிழந்தும் மங்கிய நிலையிலும் காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து விரைவில் ‘கனிகளின் ராஜா’ என்றழைக்கப்படும் அல்போன்ஸா மாம்பழங்களும் ஆஸ்திரேலியா சந்தையில் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 50 ஆயிரம் டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டில் உள்நாட்டு மாம்பழ விளைச்சல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஆண்டின் அளவையும் கடந்து மாம்பழ ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைக்கும் என தெரிகிறது.