ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வும், ஊடக அடக்குமுறைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த இரு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ். பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன்னால் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஊடக அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும், படுகொலைகள், காணாமல் ஆக்கப்படல் போன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி விசாரணை வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வட. மாகாண சபையின் உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள், சட்டவாளர்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

IMG_0127