மலேசியாவில் நடைபெற்று வரும் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக்கில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியாவிடம் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தது.
மலேசியாவில் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை டிரா செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் 3-0 என வெற்றி பெற்றது.
இன்று நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியாவின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்த இந்தியா, 25-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. இந்தியாவின் முன்னணி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் இந்த கோலை அடித்தார்.
அதன்பின் ஆக்ரோஷமாக விளையாடிய அவுஸ்ரேலியா வீரர்கள் 30, 34 மற்றும் 51-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஒரு கோலிற்குப் பிறகு இந்திய வீரர்களால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அவுஸ்ரேலியா 3-1 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் முடிவில் அவுஸ்ரேலியா 7 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தியா நான்கு புள்ளிகள் பெற்றுள்ளது.