அவுஸ்ரேலிய அரசாங்கம் ‘457 விசா’ நடைமுறையை ஒழிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதனால் இந்தியர்கள் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும். இதுகுறித்து நல்ல முடிவு எடுக்க ஆஸி. பிரதமரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் வேலைப்பார்க்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்குதான் அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், ‘எச்1பி’ விசா முறையில் கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என்று டொனால்டு டிரம்ப் கூறினார்.
அதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர், எச்1பி விசா நடைமுறை மாற்றம் குறித்த கோப்பில் கையெழுத்திட்டார். அமெரிக்காவை போல் பல நாடுகளில் வெளிநாட்டினர் வேலைபார்த்து வருகின்றனர். இதனால் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.
அவுஸ்ரேலியாவிற்கும் இதுபோன்ற ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் ‘457’ என்ற விசா நடைமுறையை ஒழிப்பதாக அறிவித்துள்ளார். இந்த விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் ஆஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் வேலைப் பார்க்க முடியும்.
தற்போது எடுத்திருக்கும் முடிவினால் ஏராளமான இந்திய ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இதுகுறித்த கவலையை இந்திய பிரதமர் மோடி, அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘அவுஸ்ரேலியா 475 விசா நடைமுறையில் கொண்டு வந்துள்ள மாற்றம் எங்களுக்கு பெரிய கவலையளிக்கிறது என்று பிரதமர் மோடி, மால்கம் டர்ன்புல்லிடம் டெலிபோனில் தெரிவித்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்த ஒப்புக்கொண்டனர்.
முன்னதாக, அவுஸ்ரேலிய பிரதமர் இந்த விசா விவகாரம் குறித்து கூறுகையில் ‘‘நாங்கள் குடியேற்ற நாடுதான். ஆனால், அவுஸ்ரேலிய நாட்டில் உள்ள வேலைகளுக்கு அவுஸ்ரேலியர்களை பணியமர்த்துவது குறித்தும் பார்க்க வேண்டும். ஆகவே, நாங்கள் 457 விசாவை முடிவுக்கு கொண்டு வருகிறோம்’’ என்றார்.