நவுரு தீவு ஒரு நரகம்! -ஈழ அகதியின் வேதனை!

நவுரு தீவு ஒரு நரகம் என அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். சட்டவிரோதமாக படகு மூலம் சென்றவர்கள் அவுஸ்ரேலியாவினால் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடுப்பு முகாமிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞன் விக்டோரியாவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வு அகதி நடவடிக்கை தொடர்பான அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளரான ரவி அங்கு கருத்து வெளியிட்ட போது 22 நாள் படகு பயணத்தில் தப்பித்த பின்னர் நவூருவில் இரண்டு வருடங்கள் எவ்வாறு செலவிட்டேன் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் முன்னாள் அரசியல் கைதிகள் என்ற ஒரு நரகத்திலிருந்து தப்பிய பின்னர் நவூரு என்ற மற்றொரு நகரத்திற்கு தான் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களின் மூச்சுகாற்று தான் சுதந்திரம் என குறிப்பிட்ட ரவி, நீண்டகால தடுப்புகள் எவ்வாறு நம்பிக்கையை இழக்க செய்கின்றதென விவரித்துள்ளார்.

புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பான கொள்கைகள் மக்களை கொன்றுள்ளதாக அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 27ம் திகதியன்று தீ வைக்கப்பட்ட நிலையில், அண்மையில் உயிரிழந்த தனது நண்பர் ஓமெய்ட் என்பவரை அவர் உதாரணமாக குறிப்பிட்டுள்ளார். புகலிடம் கோருவோர் மற்றும் தஞ்சம் கோருவோர் தடுத்து வைக்கப்படுவதன் மூலம் மனித உரிமை மீறப்படுவது குறித்து ரவி சுட்டிக்காட்டியுள்ளார். இது அவுஸ்திரேலியாவில் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலிய சமூகத்தில் இணைந்து பங்களிப்பு வழங்க விரும்புவதாக ரவி தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல, நாங்கள் உங்கள் நண்பர்களே, ஒன்றாக ஒரு பெரிய அவுஸ்ரேலியாவை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.