வெப்பநிலைக்கு ஏற்ப மாறும் துணி!

வெயில், குளிர் போன்றவற்றிலிருந்து தப்பிக்க, பல வகை உடைகளும், ‘ஏசி’, மின் விசிறி போன்ற சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், உடையே எந்த தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு மாறி நம்மைக் காக்க முடிந்தால் எப்படி இருக்கும்?அதைத்தான் செய்கிறது, ‘அதர்லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் ஒரு புதுவகை துணி. நைலான், பாலியஸ்டர் போன்ற பொருட்களின் அடுக்குகளைக் கொண்டு, வெளியே குளிர் அதிகமாக இருந்தால் கதகதப்பையும், வெப்பம் அதிகமாக இருந்தால், குளிர்ச்சியையும் தரும் விதத்தில் இந்த புதுவித துணி இருக்கிறது.

இரு வேறு தட்பவெப்ப நிலைக்கேற்றபடி விரிவடையும் தன்மையுள்ள இரு விதமான இழைகளை இணைத்து உருவாக்கிய துணியால், வெளியே குளிர்ச்சி ஏற்பட்டால், துணியின் இரு அடுக்கு இழைகள் விரிவடைந்து இடைவெளியை ஏற்படுத்துகின்றன.

இதனால் அணிபவர் கதகதப்பை உணர்வார். வெளியே வெப்பம் அதிகமாக இருந்தால், இரு இழை அடுக்குகள் சுருக்கமடைய, அணிபவர் குளிர்ச்சியை உணர்வார்.

இந்த புதுவகை துணியை சோதனைக்காக பிறர் அணிந்தபோது, அவர்கள் மிகவும் இதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது சந்தைக்கு வந்தால், குளிர் சாதனங்கள் போன்றவை தேவைப்படாது என்கிறது http://materialcomforts.com இணைய தளம்.