சனி கிரகத்தை நெருங்குவதற்கான இறுதிக்கட்ட பயணத்தை தொடங்கிய காசினி விண்கலம், டைவ் அடித்து சனி வளையங்களுக்குள் ஊடுருவி சாதனை படைத்துள்ளது.
சூரியக் குடும்பத்திலுள்ள சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997-ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி காசினி விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் திகதி சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நுழைந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது.
இதுவரை சனிக்கிரகத்தை சுற்றி ஆய்வு செய்த காசினி விண்கலம், சனி கிரகத்தை நெருங்குவதற்கான தனது கடைசி பயணத்தினை இன்று தொடங்கியது. சனி கிரகம் மற்றும் அதன் வளையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் டைவ் அடித்து ஊடுருவி சாதனை படைத்தது.
இவ்வாறு சனி கிரகத்தின் 22 வளையங்களுக்குள்ளும் டைவ் அடித்து, கடைசியாக செப்டம்பர் மாதம் 15-ம்திகதி சனி கிரகத்தில் விழுந்து தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது.
காசினியின் இந்த பிரம்மாண்ட இறுதிக்கட்ட பயணத்தை கவுரவிக்கும் வகையில் கூகுள் தேடுபொறி நிறுவனம், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 15-ம்திகதி காசினி விண்கலம் சனி கிரகத்தில் விழும்போது அதன் எரிபொருள் அனைத்தும் காலியாகிவிடும். ஆனால், சனி கிரகத்தினை நெருங்குவதற்கான கடினமான டைவ் என்பது வெறும் வான வேடிக்கையாக மட்டும் இருக்காது. தடைகளைக் கடந்து சனியின் வளிமண்டலத்திற்குள் காசினியால் நுழைய முடியாமல் போனால், சனியின் நிலவுகளில் ஒன்றின் மீது மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.