அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா சென்றிருந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
“சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு சகோதரர்களையும் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்” என்று குமார் குறிப்பிட்டுள்ளார். குமாரையும் அவரது சகோதரர்களையும் கண்ணைக் கட்டி இழுத்துச்சென்ற இனந்தெரியாத நபர்கள் இரத்தக்கறைகள் காணப்பட்ட அறையில் குமாரை அடைத்துவைத்திருந்துள்ளனர்.
“அவர்கள் என்னை நிர்வாணமாக அறையொன்றினுள் அடைத்து வைத்தனர். அந்த அறைக்குள் ஒழுங்காக உறங்கக்கூட முடியாது. நான் நாயைப் போல தரையில் உறங்கினேன்” என்று குமார் அவுஸ்ரேலிய ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இராணுவப் புலனாய்வாளர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துடனருடன் உள்ள தொடர்பு குறித்து குமாரிடம் விசாரைணை செய்துள்ளனர். “அவர்கள் திரும்பிவந்து எனது தலையிலும் முதுகிலும் தடியால் தாக்கினர். இதன் காரணமாக நான் முள்ளந்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்றும் குமார் கூறியுள்ளார்.
“என்னை அவர்கள் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கும் உட்படுத்தினர். பின்னர் சூடான இரும்பினால் எனது உடலில் தாக்கினர். நான் அவ்வேளை மரணிக்கப்போகின்றேன் என நினைத்தேன். பின்னர் மயக்கமடைந்துவிட்டேன்” என்று குமார் தெரிவித்துள்ளார். தனது உறவினர் ஒருவர் தன்னைத் தடுத்துவைத்திருந்த நபர்களுக்குப் பணம் வழங்கியே தன்னை மீட்டெடுத்தார் என்று குமார் மேலும் கூறியுள்ளார்.