மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு?

மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை நண்பரும் தமிழரசுக்கட்சி தலைவருமான மாவை சேனாதிராசா மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் கருத்து வெளியிடுகையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையினில், கிளிநொச்சியினில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் போனோரது பாதுகாவலர்களது போராட்டத்திற்கு சென்றிருந்த மாவை சேனாதிராசா இத்தகைய போராட்டங்கள் நல்லாட்சி அரசிற்கு நெருக்குதல்களை வழங்கி மஹிந்த ஆட்சிபீடமேற வழிகோலிவிடுமென தெரிவித்திருந்தார்.

இக்கருத்து பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுரேஸ்பிறேமச்சந்திரன் உண்மையினில் போராடும் மக்களிற்காக குரல் கொடுப்பதும் அவர்களிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதும் தான் அந்த மக்கள் பிரதிநிதிகளின்; கடமையாகும்.அதனை விடுத்து மக்களினை மிரட்டுவதல்ல.

உண்மையினில் மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை மாவை போன்றவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.மஹிந்த வந்தால் தமிழ் மக்களிற்கு ஏதும் இனி நடக்க எஞ்சியிருக்கவில்லை.சிலவேளை மாவை போன்றவர்கள் வகித்துவரும் பதவிகள் பறிபோகலாம்.

இதே போன்றே மிகப்பெரியதொரு விடுதலைப்போராட்டத்தின் முடிவினில் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயுமுள்ள நிலையினில் அவர்களது உறவுகளுடன் இணைந்து துன்பத்தினில் பங்கெடுப்பதே பிரதானமாகும்.இதை விடுத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரினில் நடத்தப்படும் உதைபந்தாட்ட களியாட்ட போட்டியினில் பங்கெடுத்து அதற்கும் மாவை சேனாதிராசா விளக்கமளித்துள்ளார்.

இவ்விளையாட்டுப்போட்டியின் பின்னணியினில் யாருள்ளார் என்பதனை நான் அறியேன்.உண்மையினில் மாவையின் மூளை கறள்கட்டிவிட்டதாவென்ற சந்தேகம் அவரது அண்மைய உரைகள் மூலம் எழுவதாகவும் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.