கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா?

அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா?

தமிழர்களின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் ஆச்சரியம் தருபவைகளாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அவற்றுள் சில செய்திகளையும் அவற்றின் பின்னணிகளையும் அவை தொடர்பான பொதுமக்களின் வியாக்கியானங்களையும் இந்தப் பத்தியில் நோக்க வேண்டிய தேவையுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி நிகழ்த்திய உரையொன்றுக்கு பல ஊடகங்களும் முக்கியத்துவமளித்து முன்பக்கத் தலைப்புச் செய்தியாக அதனை வெளியிட்டிருந்தன.

அவரது உரை பின்வருமாறு இருந்தது “பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் மீளளிக்குமாறு நான் உத்தரவிட்டும், படைத்தரப்பினர் அதனை செயற்படுத்தாது இருப்பது எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது” என்று ஜனாதிபதியின் உரை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியானவர் அப்பதவி வழியாக சகல அதிகாரங்களையும் கொண்டவராக விளங்குவார். 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு நிறைவேற்றிய புதிய அரசியல் யாப்பே இத்தனை அதிகாரங்களையும் கொண்டதாக உருவாக்கப்பட்டது.

இதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது பாணியில் விபரிக்கையில், ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்றெல்லா அதிகாரங்களையும் ஜனாதிபதியாகிய தாம் கொண்டுள்ளதாக மிடுக்கு வீரத்துடன் தெரிவித்திருந்தார்.

அதே அரசியல் யாப்பின் அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியாகவே மைத்திரிபால சிறிசேனவும் இருக்கின்றார். அப்படியானால் தமது உத்தரவுகளை படையினர் செயற்படுத்தவில்லையென்று இவர் கூறினால் அதனை யார் நம்புவர்? அதனை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? பொய்யோ உண்மையோ ஓரளவுக்காவது நம்பக்கூடியதாக இருக்க வேண்டுமல்லவா?

இது ஒருபுறமிருக்கட்டும்! தொடர்ந்து இடம்பெறும் தமிழ் மக்களின் பலவேறு வடிவங்களிலான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு முகம் கொடுக்க முடியாத அவலம் கூட்டமைப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழர் வாழும் பிரதேசங்கள் எங்கும் அரசாங்க அதிகாரிகளுடனும் படைத்தரப்பினருடனும் காணிகள் விடுவிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் இச்சந்திப்புகளுக்கு கணிசமான முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இச்சந்திப்பொன்று தொடர்பாக வெளியான ஒரு செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது. “ஜனாதிபதி கூறினால் பொதுமக்கள் காணிகளிலிருந்து உடனடியாக இராணுவ முகாம்களை நீக்கி அங்கிருந்து வெளியேறுவோம் என படைத்துறை அதிகாரி ஒருவர் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்” என்று அந்தச் செய்தி அமைந்திருந்தது.

இந்தத் தகவலை கூட்டமைப்பினரே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர் என்பதையும் அந்த ஊடகங்கள் குறிப்பிடத் தவறவில்லை.

படைத்தரப்பு இப்படிக் கூறுவது உண்மையானால், தாம்; உத்தரவிட்டும் படையினர் அதனைச் செயற்படுத்தவில்லையென்று ஜனாதிபதி முன்னர் தெரிவித்தது அப்பட்டமான பொய்யா என்ற கேள்வி எழுகிறது.

அல்லது, ஜனாதிபதி சொன்னதுதான் உண்மையென்றால், படைத்தரப்பினர் கூட்டமைப்பினரிடம் சொன்னது பொய்யா என்று கேட்கத் தோன்றுகிறது.

இரு தரப்புடனும் பேச்சு வார்த்தை நடத்திவரும் கூட்டமைப்பினர் நினைத்தால் இதனைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவர்கள் இதனை விரும்ப மாட்டார்கள்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஷசன்டே லீடர்| பத்திரிகை இந்த மாதம் 16ம் திகதிய இதழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை எச்சரிக்கிறது. (வுNயு றயசளெ பழஎநசnஅநவெ) என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது .

கூட்டமைப்பினால் அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் என்ற நேரடி எச்சரிக்கைப்பாங்கில் இது எழுதப்பட்டிருந்தது. “வடக்கிலுள்ள தமிழர்களின் முக்கிய விடயங்களில் சிலவற்றையாவது உடனடியாக இந்த அரசு கவனிக்கத் தவறினால், அரசாங்கத்தை மாற்றும் விடயத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்” என்பது இந்த ஆங்கிலச் செய்தியின் முதற்பந்திக்கான தமிழாக்கம்.

வவனியாவில் தனியார் நிறுவனம் ஒன்று அன்பளிப்பாக வழங்கிய 150 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் கூட்;டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று இச்செய்தி கூறுகின்றது.

அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில் ஆட்சியமைப்பது என்று பொருள்படுமா? அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் துணைபோவது என்று விளங்கிக் கொள்ளலாமா?

இது எதனையுமே குறிப்பிட்டுச் சொல்லாது மொட்டையாக நிகழ்த்தப்பட்ட இந்த உரைக்கான மூலவிளக்கத்தை கூட்டமைப்பிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் சரிந்து செல்லும் தங்கள் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த, இப்படியான வெடிகுண்டுகளைத் தேவைப்படும் வேளைகளில் வீசுவது கூட்டமைப்புக்குக் கைவந்த கலை. இத்தொடரில் இறுதியாக வெளிவந்த இராணுவத்தரப்புச் செய்தியொன்று மிக முக்கியமானது.

கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் தொடர்பாக அங்குள்ள இராணுவத்துடன் கூட்டமைப்பினர் பேச்சு நடத்தியபோது, எக்காரணம் கொண்டும் முழுக் காணிகளையும் மக்களிடம் மீளளிக்க முடியாதென்று படைத்தரப்பு கூறியுள்ளது.
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள போராட்ட மக்கள், முழுக்காணிகளையும் ஒப்படைக்காதவரை தங்கள் போராட்டம் தொடருமென அறிவித்ததுடன், அறுபது நாட்களுக்கும் மேலாக அதனைத் தொடர்கின்றனர்.

பொதுமக்கள் காணிகள் மீளளிப்புத் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று விதமான, முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளிவந்துள்ளதை இதுவரை பார்க்க முடிந்தது.

அரசாங்கம் இவ்விடயத்தில் எதனையுமே செய்வதற்குத் தயாரில்லையென்பதையே இதனூடாகப் பகுத்துப் பார்க்கலாம்.

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட அவகாசம் வழங்கப்பட்டு ஒரு மாதம் முடிந்துள்ளதாயினும், எந்தவொரு மாற்றத்தையும் காணமுடியவில்லை.

ஆனால், கூட்டமைப்பினரின் பேச்சுகளும் அறிக்கைகளும் ஏதோவொரு மாற்றத்தைக் காட்டுவதை சில ஊடகங்கள் சுட்டியுள்ளன.

எதற்கெடுத்தாலும், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என உச்சத்தில் குரலெழுப்பும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, போராடும் மக்களுடன் இணைந்து நாமும் போராடுவோம் என்று அண்மையில் கூறியதை இரு வாரங்களுக்கு முன்னர் இங்கு எழுதியிருந்தோம்.

இப்போது, அந்த ஏணியில் ஒருபடி மேலே ஏறி நின்று மற்றொரு கருத்தை இவர் வாய்மொழிந்துள்ளார்.</p>
இந்த அரசு எம்மை ஏமாற்றுமானால், சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து கூட்டமைப்பு ஒரு தீர்மானத்தை எடுக்குமென்பது மாவையரின் வாய்மொழி. அது என்ன தீர்மானமோ?

சர்வதேச சமூகத்துடன் சேர்ந்துதானே இலங்கைக்கு இரண்டு வருட காலநீடிப்பை கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்தது.
இப்போது அதே சமூகத்துடன் சேர்ந்து இன்னொரு தீர்மானமா? தமிழரின் காதுகளில் இனியும் பூ வைப்பதற்கு இடமில்லையென்பதை கூட்டமைப்பினருக்கு யார் எடுத்துக் கூறுவது?

இவைகள்தான் கூட்டமைப்பினரிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்றால், இதற்குக் காரணம் ஏமாற்றமா? அல்லது மனமாற்றமா?

பனங்காட்டான்