விவசாயிகளின் போராட்டத்தை மையமாக வைத்து ’தெருநாய்கள்’ என்ற படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குனர் செ.ஹரி உத்ரா. இதில் அப்புக்குட்டி, பிரதிக், ’கோலிசோடா’ நாயுடு, மைம் கோபி, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அக்ஷதா நடிக்கிறார்.
படம் பற்றி ஹரி உத்ராவிடம் கேட்டால், ‘இன்றைக்கு விவசாய நிலங்கள் எல்லாத்தையும் கார்பரேட் நிறுவனங்கள் கூறுபோட்டுகிட்டு இருக்காங்க. தஞ்சாவூர்ல மீத்தேன், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகள்ல ஹைட்ரோகார்பன்னு நம்ம விவாசாய நிலங்களை ஒண்ணுமில்லாம பண்ணிகிட்டு இருக்காங்க. கார்பரேட்களால் நம்ம விவசாயம் எப்படி பாதிக்கப்படுதுன்னு இந்தப் படத்துல சொல்றோம்.
விவசாயம் அழிஞ்சா நாமளும் அழிஞ்சுட்டோம்னு அர்த்தம். அந்த விஷயத்தை கொஞ்சம் ஆக்ரோஷமா சொல்ற படமா இது இருக்கும் . அரசியல்வாதிகளையும் கார்பரேட்டுகளையும் எதிர்த்து போராடறது பெரிய சவால்தான்.
மக்கள் நினைத்தால் எதையும் மாற்றலாம் அப்படிங்கற கருத்தை இந்தப் படம் சொல்லும். விவசாயிகளையும் விவசாயத்தையும் உயர்த்தி பேசற படமா இது இருக்கும். ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு.
படத்தை சுசில் குமார் தயாரிச்சிருக்கார். ஹரிஷ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்’ என்கிறார் செ. ஹரி உத்ரா. இவர் சில படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.