சீனாவுடனான இராஜதந்திர உறவில் பதட்டம் ஏற்படக்கூடும் என்று காரணங்காட்டி, பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் அவுஸ்ரேலிய கடற்படையைப் பங்கு கொள்ள இந்திய அரசு தடுக்கவிருக்கிறது.
கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக, அவுஸ்ரேலியாவின் வட கடற்பரப்பில், மலபார் பயிற்சி (Exercise Malabar) என அறியப்படும் கடற்படை பயிற்சிகளை அமெரிக்கா, இந்தியா, மற்றும் சமீபகாலத்திலுருந்து ஜப்பானுடன் கூட்டாக, ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கடற்படையும் நடத்தி வந்தது.
2007 ஆம் ஆண்டில் மலபார் பயிற்சிகளில் அவுஸ்ரேலியா பங்கேற்றது, ஆனால் சீன அரசு கரிசனை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பயிற்சிகளிளிருந்து விலகிக் கொண்டது.
இந்த வருட மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியா பங்கு கொள்வது குறித்து, புது டெல்லியிலுள்ள அவுஸ்ரேலியாவின் பாதுகாப்புத் துறை அதிகாரி இந்திய அதிகாரிகளுடன் கடந்த வாரங்களில் பேசியுள்ளார். பயிற்சியில் பங்கு கொள்ளாவிட்டாலும், பார்வையாளராக அனுமதிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
ஜூலை மாதம் நடைபெறும் மலபார் பயிற்சியில் அவுஸ்ரேலியா பங்கு கொள்ள விரும்புவதாக, டோக்கியோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் மரீஸ் பெய்ன் (Marise Payne), நேற்று கூறினார். “இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடனான பயிற்சியில் பங்குகொள்ள ஆஸ்திரேலியா மிகவும் ஆர்வமாக உள்ளது” என்றும் “அது எந்த வடிவில் அமையும் என்பது மேற்குறிப்பிட்ட பல்வேறு நாடுகளுக்கிடையேயான கலந்துரையாடலைத் தொடர்ந்து முடிவெடுக்கப்படும்” என்றும் செனட்டர் மரீஸ் பெய்ன் (Marise Payne) கூறினார்.
மலபார் பயிற்சியில் அவுஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் ஈடுபாடு குறித்து 2015ம் ஆண்டிலிருந்து அவுஸ்ரேலியாவும் இந்தியாவும் பேசிவருகின்றன என்று பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
“பாதுகாப்பு குறித்த எங்கள் உறவை மேலும் வளர்க்கவும், ஆழப்படுத்துவதற்கும், செயற்பாடுகளின் சீரான தன்மையையும் சிக்கனத்தையும் அதிகரிக்க அவுஸ்ரேலியாவும் இந்தியாவும் முயல்கின்றன” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டு, மலபார் பயிற்சியில் பங்கேற்க அவுஸ்ரேலிய விடுத்துள்ள கோரிக்கையை புது டெல்லி நிராகரிக்கும் என்று இராணுவ அதிகாரிகள் மத்தியில் ஊகங்கள் பெருகுகின்றன. இந்த நடவடிக்கை சீனாவின் சீற்றத்தை சம்பாதிக்கும் என இந்தியா கவலை கொண்டுள்ளமை முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal