குறைப் பிரசவ குழந்தைகளை, மருத்துவமனையில், ‘இங்குபேட்டர்’ கருவியில் வைப்பது இன்று சகஜமாகியிருக்கிறது. இங்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவர்கள் சில உணர்வான்களை பொருத்துவர்.
இந்த உணர்வான்கள், பிறந்த குழந்தை கை, கால்களை அசைக்க இடையூறாக இருப்பதோடு, சமயங்களில் தவறான சமிக்ஞைகளை வெளியிடுவதும் உண்டு. இதற்கு மாற்றாக, குழந்தையின் உடலில் எதையும் பொருத்தாமல், கண்காணிக்க உதவும் கருவியை, சுவிட்சர்லாந்திலுள்ள ஆராய்ச்சி நிலையங்களான இ.பி.எப்.எல்., மற்றும் சி.எஸ்.இ.எம்., ஆகியவற்றின் மருத்துவர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.
அந்தக் கருவி வேறு எதுவுமில்லை, கேமராக்கள் தான்! பிறந்த பச்சிளங் குழந்தையின் இதயம் துடிக்கும்போது, அதன் நெற்றிப் பகுதியில் அத்துடிப்பால் மாற்றம் வந்து வந்துபோகும். மேலும் சுவாசிப்பதை கண்காணிக்க குழந்தையின் நெஞ்சாங்கூடு மற்றும் தோள் பகுதிகளை கவனித்தாலே போதும். இந்த இரண்டையும் இரு சிறப்பு கேமராக்கள் படம் பிடித்தபடியே இருக்கும்.
இரவில், விளக்குகளை அணைத்த பிறகும், அகச்சிவப்பு ஒளியில் குழந்தையின் அறிகுறிகளை இக் கேமராக்கள் கண்காணிக்கும். இயல்புக்கு மாறான அறிகுறிகள் தோன்றும்போது, கேமராவின் தகவல்களை கவனிக்கும் மென்பொருள் நிரல், உடனே கண்டுபிடித்து செவிலியரை எச்சரிக்கும்.
தன் குழந்தை பிறந்ததுமே, சிக்கலான மின் கம்பிகளுக்கு மத்தியில் படுத்திருப்பதை பார்க்க நேரும் பெற்றோருக்கு, இப்புதிய கண்காணிப்பு கேமராக்கள் பெரும் ஆறுதலாக இருக்கும்.