ஒரு பொருளுக்குள் என்னென்ன இருக்கிறது என்பதை, புட்டுப் புட்டு வைக்க உதவுகிறது, ‘சாங்ஹோங் எச்.2’ என்ற கையடக்க திறன்பேசி. அனலாக் டிவைசஸ், கன்ஸ்யூமர் பிசிக்ஸ் மற்றும் சீனாவிலுள்ள சிசுவான் சாங்ஹோங் எலெக்ட்ரிக் கோ ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திறன்பேசியை, எந்த ஒரு உணவுப் பொருள் முதல் எந்தப் பொருளையும் அலசி, அவற்றின் மூலக்கூறு அமைப்பு உட்பட சகலத்தையும் தெரிவித்து விடுகிறது.
இந்த கருவியுடன் சாங்ஹோங் தரும் ஒரு செயலியையும் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். தினந்தோறும் பல பொருட்களின் மூலக்கூறு அமைப்புகளை உலகெங்கும் உள்ள பயனாளிகள் இந்த செயலிக்கு சமர்ப்பித்தபடியே உள்ளனர். எனவே, விரைவில் ஒருவர் ஸ்கேன் செய்யும் எந்தப் பொருளின் மூலக்கூறு அமைப்பையும் தெரிந்துகொள்ளலாம் என்ற நிலை வந்துவிடும்.
கலப்படம், நச்சுத் தன்மை, இயற்கைப் பொருளா? செயற்கையா? என்பது போன்ற சந்தேகங்களை இந்த திறன்பேசியும், இதன் செயலியும் உடனடியாக போக்க உதவும்.