தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை, எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காது, தமிழரசு கட்சியில் இருந்தவாறே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே சிறந்ததென நினைக்கின்றேன். புதிய கட்சி உருவாகினால், எதிர்காலத்தில் அது குறித்து சிந்திப்போம்” என்றார்.
தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து கருத்துத் தெரிவித்த அனந்தி சசிதரன், “போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கில் சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தினதும், தமிழ் தலைமைகளினதும் முன்னெடுப்புக்கள் அதிருப்தியளிக்கும் அதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மௌனம் புதிராக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal