கர்நாடகாவில் நடிகை ரம்யாவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பிரபல கன்னட நடிகை ரம்யா. இவர் மண்டியா தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு தான் பாகிஸ்தான் சென்று வந்ததாகவும், அங்குள்ள மக்கள் நல்லவர்கள் என்று கூறியதுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய வக்கீல் விட்டல் கவுடா என்பவர் குடகு மாவட்டம் சோமவார் பேட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷியாம் பிரகாஷ், நடிகை ரம்யா இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முடியாது என்று கூறியதுடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.